ஆக்ஷனுக்கு குட்பை சொன்னது ஏன்? 58 வயசாச்சு; எலும்பு முறிஞ்சா தாங்காது: ஜாக்கிசான் பேட்டி!!!

Sunday, ,May, ,27, 2012
கேன்ஸ்::ஐம்பத்து எட்டு வயதாகிவிட்டது. இனி ஆக்ஷன் காட்சியில் நடித்து எலும்புகள் முறிந்தால் உடம்பு தாங்காது என்கிறார் ஜாக்கிசான். அதனால் ஆக்ஷன் படத்துக்கு குட்பை சொல்ல அவர் முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் ஜாக்கிசான் அளித்த ஒரு பேட்டியில், ‘இனிமேல் சண்டை காட்சிகளில் நடிக்க மாட்டேன். ‘சைனீஸ் ஸோடியக்தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் என்று கூறி இருந்தார். இந்நிலையில் பிரான்சில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆக்ஷன் படத்துக்கு முழுக்கு போட்டது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தபோது, ‘சைனீஸ் ஸோடியக் தான் நான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம். எனக்கு 58 வயதாகிவிட்டது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்க முடியும். எலும்புகள் முறிந்தால் உடல் தாங்காது என்றார். ஜாக்கிசானின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாக்கிசானின் அதிரடி ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ஒருபுறம் இருந்தாலும் இதுவரை நடித்த ஆபத்தான பல ஸ்டன்ட் காட்சிகள் அவரது உயிரையே குடிக்கும் அளவுக்கு விபத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது. படங்களில் நடிக்கும்போது சந்தித்த விபத்துகளில் கிட்டதட்ட அவரது உடலில் உள்ள எல்லா எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. மாத கணக்கில் சிகிச்சைக்கு பிறகே அவர் குணம் அடைந்திருக்கிறார். 1995ம் ஆண்டு அவர் நடித்த ‘ஆர்மர் ஆப் காட் என்ற படம் ரிலீஸ் ஆனபோது அவரது உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவு பற்றி ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜாக்கியின் உடலில் எங்கெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதுபற்றி படம் வரைந்து பாகங்கள் குறிக்கப்பட்டிருந¢தது. ‘ஆர்மர் ஆப் காட் படத்தில் உயரமான இடத்திலிருந்து குதிக்கும் காட்சியில் மரத்தை பிடிக்க வேண்டும். காட்சிப்படி, அவர் குதித்தபோது மரத்தை பிடிக்க தவறவிட்டார். அவரது தலை நேராக தரையில் மோதியது. இதில் அவரது மண்டை உடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். ‘ஹூ ஆம் ஐ, ‘சூப்பர் காப், ‘வின்னர்ஸ் அண்ட் சின்னர், ‘போலீஸ் ஸ்டோரி, ‘புராஜெக்ட் ஏ என அவர் நடித்த ஆக்ஷன் படங்கள் புகழ்பெற்றவை.

Comments