ஸ்னேகாவுக்கு 2 தடவை தாலி கட்டுவேன்: பிரசன்னா!!!

Tuesday, May, 01, 2012
நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை ஸ்னேகாவுக்கும் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

இது குறித்து இருவரும் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம்:

கேள்வி: திருமணத்துக்குப் பிறகு ஸ்னேகா நடிப்பாரா?

பிரசன்னா பதில்: திருமணத்திற்குப் பிறகும் ஸ்னேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல நடிகை. திருமணத்திற்குப் பிறகு அவர் விரும்பினால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.

கேள்வி: உண்மையிலேயே நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக காதலித்தீர்கள்?

பிரசன்னா பதில்: கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் வீடுகளில் சம்மதம் கிடைத்த பிறகே அது பற்றி வெளியே சொன்னோம்.

கேள்வி: உங்களில் யார் முதலில் காதலைச் சொன்னது?

பிரசன்னா பதில்: நாங்கள் முதலில் நண்பர்களாக இருந்தோம். பின்பு காதல் வந்த பிறகு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைத்தோம். நான் அவருக்கு கணவராகவும், அவர் எனக்கு மனைவியாகவும் வந்தால் எப்படி இருக்கும் என்பது பரஸ்பரம் புரிந்து கொண்டோம். வாழ்க்கை பற்றி எங்களுக்கு ஒரே மாதிரியான அபிப்ராயம் இருந்தது.

கேள்வி: உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்?

பிரசன்னா பதில்: ஸ்னேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் முதலில் நாயுடு முறைப்படியும் பிறகு எங்கள் பிராமண முறைப்படியும் நடக்கும். நான் ஸ்னேகா கழுத்தில் 2 முறை வலுவாக தாலி கட்டுவேன்.

கேள்வி: திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா?

பிரசன்னா பதில்: ஸ்னேகாவுக்கு சாதாரண பெண் போன்று சமையல் எல்லாம் செய்ய ஆசை. அதனால் நிச்சயம் தனிக்குடித்தனம் தான் என்றார்.

அதன் பிறகு ஸ்னேகா கூறுகையில்,

நான் கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்த பிறகு அதைப் பார்க்கலாம் என்றார்.

Comments