தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியெடுத்த வழக்கு எண் 18/9!!!!

Wednesday,May,02,2012
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காண்பித்துவிட்டனர் பாலாஜி சக்திவேலும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்.

படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

படம் பார்த்த இயக்குநர்களில் ஒருவரான ரா பார்த்திபன், "சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்... ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, "இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?" என்றார்.

படத்தின் விமர்சனத்துக்கு.... வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருங்க!

Comments