'கோ' படத்திற்கு நாகி ரெட்டி விருது :ரூ.150000 பரிசு!!!

Wednesday,May,02,2012
நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக சிறந்த திரைப்படத்திற்கான விருது 'கோ' படத்திற்கு வழங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களை தயாரித்தவரும், ஆசியாவில் மிகப்பெரிய ஸ்டுடியோ என்ற பெயரை பெற்ற விஜயா வாஹினி ஸ்டுடியோவை நிறுவியவர் பி.என்.நாகி ரெட்டி. தமிழக அரசு விருது, பால்கே விருது போன்றவைகளைப் பெற்ற நாகி ரெட்டி, இரண்டு முறை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். சினிமா துறை மட்டும் இன்றி, பத்திரிகை துறையில் மருத்துவ துறையில் வெற்றி பெற்ற நாகி ரெட்டியின், நூற்றாண்டு விழா 'நாகி ரெட்டி கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை' சார்பில் கொண்டாடப்பட்டது.

மே 1ஆம் தேதியன்று சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், சென்ற ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக பின்னணி பாடகர் உன்னி மேனனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரான படங்களின் பாடல்களை உன்னி மேனன் இசைக் குழுவினர் பாடினார்கள். பிறகு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஏ.வி.எம்.சரவணன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகை நதியா ஆகியோர் நாகி ரெட்டியைப் பற்றி பேசினார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கு நாகி ரெட்டி பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை சவுக்கார் ஜானகி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சிறந்த படங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதில் 'கோ' படம் சிறந்த ஜனரஞ்சக படமாக தேர்வு செய்யப்பட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, நடித்த இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டது. இவ்விருதுடன் ரூ.150000 பணமும், நினைவு பரிசும் இப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டிருக்கும் நாகி ரெட்டி விருது இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments