விவேக் தொடங்கிய பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை: கடலூரில் அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்!!!

Tuesday, ,May, 29, 2012
நடிகர் விவேக் தொடங்கிய `பசுமை கலாம்' திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை கடலூரில் ஜுன் மாதம் 7-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நிறைவு செய்கிறார்.

10 லட்சம் மரக்கன்றுகள்

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அத்தியந்த சீடரான நடிகர் விவேக், வழக்கமாக சந்திப்பது போல அப்துல்கலாமை சந்தித்து பேசினார். அப்போது, அப்துல்கலாம், ``நாட்டில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தை பற்றி, ஏன் உங்கள் படத்தில் கூறக்கூடாது'' என்று கேட்டார். அதற்கு நடிகர் விவேக், ``அய்யா எனது படங்களில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் ஒரு இயக்கமாக தொடங்கி இந்த பணியை செய்வேன்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அப்துல்கலாம், ``உடனடியாக தமிழ்நாட்டில் இந்தப்பணியை தொடங்குங்கள் என்றார். எத்தனை மரக்கன்றுகள் நடுவீர்கள்'' என்றும் கேட்டார். அதற்கு அவர், 10 லட்சம் மரக்கன்று நடுவேன் என்றார். இதைக்கேட்டு அப்துல்கலாமும் மலைக்கவில்லை. நிச்சயம் இவரால் முடியும் என்று நம்பினார்.

பணம்-பரிசு வேண்டாம்

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு, `பசுமை கலாம்' திட்டம் என்று நடிகர் விவேக் பெயர் வைத்தார். முதல் மரக்கன்று, பள்ளி மாணவர்களால் நடப்பட வேண்டும் என்று, திருச்சியில் உள்ள மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு கொடுத்தனர்.

அதன்பின்னர், நடிகர் விவேக் கலந்துகொள்ளும் விழாக்களில், ``எனக்கு பணமோ, பரிசோ வேண்டாம். அதற்கு பதிலாக மரக்கன்றுகளை நடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார். அப்படி பெறப்பட்ட மரக்கன்றுகளை கொண்டு, இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

அதாவது, முதலில் நடுவதாக குறிக்கப்பட்டது 10 லட்சம் மரக்கன்றுகள். ஆனால், இதுவரை நட்டு முடிக்கப்பட்டது 13 லட்சம் மரக்கன்றுகள்.

இந்த `பசுமை கலாம்' திட்டத்தின் நிறைவு விழா, ஜுன் மாதம் 13-ந்தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து நடிகர் விவேக் கூறியதாவது:-

சிந்தையில் உதித்த திட்டம்

இந்த திட்டத்தை அப்துல்கலாம் தொடங்கிவைத்தார். அனைவரும் ஆதரவு தந்தனர். என்னையே அறியாமல் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது, எனது முயற்சியின் முதல் கட்டம்தான். தொடர்ந்து பல லட்சம் மரக்கன்று நடுவது எனது சிந்தையில் உதித்த திட்டம். மத்திய, மாநில அரசுகள் மர வளத்தை பெருக்குவதற்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நமது இதிகாசங்களில் ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது என்று இருக்கிறது. அதுபோல், அரசு மேற்கொள்ளும் மரவளம் பெருக்கும் மாபெரும் பணிக்கு, இந்த விவேக் அணில் போல தனது பணியை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.

Comments