
'மதுர', 'அரசாங்கம்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.மாதேஷ் இயக்கும் படம் 'மிரட்டல்'. இதில் வினய், சந்தானம், கஞ்சா கருப்பு, பிரபு, பாண்டியராஜன், பிரதீப் ராவத், மன்சூர் அலிகான், பாஸ்கி, ஷர்மிளா, உமா பத்மநாபன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் லண்டனில் இப்படத்திற்காக பரபரப்பான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நாயகியை விமானத்தில் கடத்திச் செல்வது போன்ற அந்த காட்சியை லண்டன் நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் லண்டன் பல்கலை கழகம், டவர் பிரிட்ஜ், பக்கிங்காம் பேலஸ் பகுதிகள் மற்றும் உலகிலேயே மிகவும் பிரபலமான ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி விமான நிலையம் மற்றும் லண்டன் சிட்டி விமான நிலைய ஓடுதளம் ஆகியப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான இந்த காட்சியை மூன்று கேமராக்களுடன், ஹெலிகாப்டரில் ஹாலிவுட் படங்களில் மட்டுமே கையாளப்படும் புதிய யுக்தியுடன் நவீனரக கேமிராவை வைத்து மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்ட விதத்தை பார்த்து அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினர் வியந்து இயக்குநர் மாதேஷை பாராட்டினார்களாம். இப்படி பரபரப்புக்கும், பொழுது போக்கு அம்சங்களுக்கும் பஞ்சமில்லாமல் உருவாகும் 'மிரட்டல்' படத்திற்கு பிரவீன் மணி இசையமைக்கிறார். கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Comments
Post a Comment