பெப்சி தொழிலாளர் போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் சினிமா படப்பிடிப்பு!!!

Friday, April, 06, 2012
சென்னை::திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையே கடந்த 6 மாதமாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அரசு சார்பில் தொழிலாளர் நல ஆணையரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனாலும் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் சங்கத்தை துவங்கப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

வெளியூர் படப்பிடிப்புகளில் உள்ள தொழிலாளர்கள் படப்பிடிப்பை புறக்கணித்து விட்டு உடனடியாக சென்னை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பட வேலைகளை அப்படியே போட்டு விட்டு இன்று சென்னை திரும்பினர். லைட்மேன்கள், டிரைவர்கள், ஆர்ட் டைரக்டர்கள், உதவி இயக்குனர்கள், துணை நடிகர்-நடிகைகள், நடன இயக்குனர்கள், டான்சர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் படப்பிடிப்பில் பங்கேற்காமல் சென்னை வந்துவிட்டனர்.

22 படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் திரும்பிவிட்டதாக பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மாலைமலர் நிருபரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், முரளிதரன், சிவா, ஞானவேல் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், சித்ராலட்சுமணன் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதையடுத்து படப்பிடிப்புகளுக்கு இன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பல்லாவரத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதுபோல் கருணாஸ் தயாரித்து நடிக்கும் 'ரகளபுரம்' படத்தின் படப்பிடிப்பு ரெட்ஹில்ஸ் அருகில் இன்று நடந்தது. அப்படப்பிடிப்புக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இதுபோல் சிதார்த் நடிக்கும் 'காட்டு மல்லி' படப்பிடிப்பும் சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. பாரதிராஜா இயக்கும் 'அன்னகொடியும் கொடி வீரனும்' படப்பிடிப்பு தேனியில் போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.

விக்ரம் நடிக்கும் 'தாண்டவம்' படப்பிடிப்பிலும் போலீஸ் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல். தேனப்பன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

சினிமா படப்பிடிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறோம். பெப்சி தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்ட ஊதியத்தை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலர் தங்கள் சுய நலத்துக்காகவும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போக்கு பிடிக்காமல் பெப்சியில் இடம் பெற்றிருந்த பல சங்கங்கள் விலகி எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. பெப்சி உடைந்துவிட்டது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து படங்கள் எடுத்து கஷ்ட நிலையில் இருக்கின்றனர். பெப்சி தொழிலாளர் போராட்டம் தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments