தமிழக அரசு தலையீடு: தயாரிப்பாளர்கள் - 'பெப்சி' உடன்பாடு... ஸ்ட்ரைக் வாபஸ்!!!

Wednesday,April,11,2012
சென்னை::தமிழக அரசின் தலையீடு காரணமாக 'பெப்சி' தொழிலாளர்கள் - தயாரிப்பாளர் இடையே அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி), தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படாததால் பெப்சி வேலைநிறுத்தத்தை அறிவித்தது.

தயாரிப்பாளர்கள் தரப்பில் புதிய தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தீவிரமடைந்தது.

ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் முன்னிலையில் நேற்று இரவு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பெப்சி பொதுச்செயலாளர் சிவா, ஊதியக்குழு தலைவர் அமீருடன் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது.

ஸ்டிரைக் வாபஸ்

பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7.30 மணி வரை நீடித்தது. பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் கூறுகையில், "வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம்.

இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளையும் அதில் உள்ள நியாயங்களையும் முன்வைத்தனர். அதையடுத்து, அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பெப்சி பொதுச்செயலாளர் சிவா அறிவித்தார்.

புதிய சங்கம் தொடங்கினால் நடவடிக்கை

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தனியாக புதிதாக ஒரு தொழிலாளர் சங்கம் தொடங்கி இருப்பது பற்றி எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை. அதேபோல், தயாரிப்பாளர் சங்கமும் அதுபற்றி எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக ஏதாவது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெப்சி தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முழு ஒத்துழைப்பு தருவதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டார்கள். இந்த பேச்சுவார்த்தை வெகுவிரைவில் நடைபெறும்.

பெப்சி சம்மேளனத்தில் மொத்தம் 23 சங்கங்கள் உள்ளன. இவற்றில் 15 சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள 8 சங்கங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்," என்றார்.

தமிழக அரசு செய்திக் குறிப்பு

பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சுமூக தீர்வு காணும் பொருட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினருக்கும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பெப்சி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு சினிமா படப்பிடிப்பு நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கவும், தயாரிப்பாளர் சங்கத்தினரும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments