
அமெரிக்காவில் ஷாரூக்கானுக்கு நடந்ததைப் போன்ற அனுபவம் எனக்கும்தான் ஏற்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. அந்த பிரச்சினையை நான் ரசிக்கிறேன். சொல்லப்போனால் என் பெயரையே Qamal Hassan என்று மாற்றப் போகிறேன், என்கிறார் உலக நாயகன் கமல்!
இந்தி நடிகர் ஷாருக்கானை அமெரிக்கர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் அல்லவா. இதுபற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, "ஷாரூக்கானை மட்டுமா... என்னையும் கூடத்தான் சந்தேகமா பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள். அங்கு இது சகஜம்தான். இதுக்காக ஏன் டென்ஷனாகனும்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர்போல் தோன்றும். எனது தந்தை பெயர் வைக்கும் போதே இதுபோன்ற சந்தேகங்கள் வரும் என்று தெரிந்துதான் வைத்தார்.
அடிக்கடி என்னிடம் உனது பெயரை பற்றி யாரேனும் விசாரித்தார்களா? முஸ்லிம் என்று நினைத்தார்களா? என்று கேட்பார் அப்பா.
நான் அமெரிக்கா போகும்போதெல்லாம், எனது பெயரும் அமெரிக்கர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. கனடா விமான நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். அரை மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். இப்படியெல்லாம் குழப்பம் வரும் என்று தெரிந்தே எனக்கு இப்பெயரை என் தந்தை வைத்துள்ளார்.
எனது சகோதரர்களுக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என பெயர் வைத்து விட்டு எனக்கு மட்டும் குறும்புத்தனமாக இந்த பெயரை சூட்டியுள்ளார். எனது பெயரை இதுபோல் சந்தேகமாக பார்த்து குழம்புவதை ஒருவிதத்தில் நான் ரசிக்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது.
என் பெயரே கியூ என்ற ஆங்கில எழுத்தை முதலில் வரும் வகையில் மாற்றப்போகிறேன். அப்படி பெயர் வைப்பதன் மூலம் பிரச்சினைகள் வரவேண்டும். அவற்றை கண்டு நான் ரசிக்க வேண்டும்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதனால்தான் ஷாருக்கானை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அது இயல்புதானே. இன்னொன்று அதுபற்றி ஷாருக்கானே கவலைப்படவில்லை. அதற்குள் ஆயிரம் கருத்துகள்.
இதுபோன்ற விஷயங்களுக்கு இந்தியாவிலிருந்து அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மாணவர்கள் நமது நாட்டில் எளிதாக ரூம் எடுத்து தங்கிவிட முடியுமா? இதை யாரும் யோசிக்கிறீர்களா... இதற்கு தீர்வு என்ன என்றாவது யோசிக்கிறோமா... அதனால் நம்மிடம் உள்ள மூடத்தனத்தை முதலில் அகற்றப் பார்க்க வேண்டும்," என்றார்.
இப்போதான் உங்கள் பட்டப்பெயர் பொருத்தமாக உள்ளது கமல் சார்!
Comments
Post a Comment