த்ரிஷா படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்!!!

Saturday, April, 28, 2012
த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த்ரிஷா, கோ கார்த்திகா, ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தெலுங்கு படம் தம்மு. நாளை ரிலீசாகிறது. இப்படம் கர்நாடகாவில் மட்டும் 150 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. பெரிய ஹீரோவின் கன்னட படத்துக்கு இணையாக இத்தனை தியேட்டர்களில் இப்படம் ரிலீசாவதால் கன்னட திரையுலகம் கொதித்துப் போயுள்ளது. இதற்கு முன் கர்நாடகாவில் ரிலீசான ரச்சா தெலுங்கு படம் அங்கு வசூலை குவித்தது. இதனால் தம்மு படத்தை போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதே நேரம், இந்த போக்கு கன்னட ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மற்ற மொழி படங்களை கர்நாடகாவில் தாமதமாகவே ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கன்னட சினிமா சங்கத்தினர் கொண்டு வந்தனர். பலத்த எதிர்ப்புகள் காரணமாக அந்த விதிமுறை நீக்கப்பட்டது. இப்போது கன்னட படங்களுக்கு இணையாக தம்மு படம் ரிலீஸ் ஆவதால், அதே நாளில் திரைக்கு வரும் 3 கன்னட படங்களின் வியாபாரம் பாதிக்கப்படலாம் என தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் கதி கலங்கியுள்ளனர். அப்பட ஹீரோக்களும் இதனால் டென்ஷனில் உள்ளனர். நாளை திரைக்கு வரும் 3 கன்னட படங்களில் உபேந்திராவின் காட்ஃபாதர் படமும் அடங்கும். இதற்கிடையே கன்னட தயாரிப்பாளர் சங்கம், இது பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று மொழி படங்களுக்கு குறிப்பிட்ட அளவு தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Comments