ரஜினியிடம் கேட்கவில்லை... நஷ்ட ஈடு தர தனுஷ், ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டனர் - நட்டி குமார்!!!

Friday, April, 20, 2012
3 படத்தின் தெலுங்கு விநியோகத்தில் ஏற்பட்ட பெரிய நட்டத்தை ஈடுகட்டுமாறு நான் ரஜினியிடன் கேட்கவில்லை. ஆனால் அவர் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும் இந்த நட்டத்தை ஈடுகட்டித் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார் நட்டி குமார்.

தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படத்தின் தெலுங்கு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டார் நட்டி குமார் என்பவர்.

ஆனால் தெலுங்கில் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்துவிட்டது. இந்த நட்டத்தை ரஜினி ஈடுகட்டுவார் என நட்டி குமார் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, அது பரபரப்பைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினி அறிக்கை விட வேண்டி வந்தது. மேலும் தனுஷும், ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டார்.

இந்த நிலையில் நட்டி குமார் மீண்டும் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "ஆந்திராவில் 3 படத்தை வாங்கி நான் வெளியிட்டேன். படம் தோல்வி அடைந்ததால் 80 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்பேன் என்று நான் கூறவில்லை. ரஜினி உதவுவார் என எதிர்ப்பார்ப்பதாகத்தான் கூறினேன்.

ரஜினி இந்த படத்தின் விநியோகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் 3 படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

இந்த படத்தை 6.5 கோடி செலவில் தயாரித்தனர். கொலவெறி பாடலை வைத்து ரூ.50 கோடிக்கு விற்றுவிட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம். எவ்வளவு தொகை வசூலானது என்று விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி ஆறுதலாக சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கொடுப்பதைக் கொடுக்கட்டும்," என்றார்.

Comments