
யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நாவரசன், ஜி.தேவராஜ் இணைந்து தயாரிக்கும் படம் 'சோக்காலி'. இப்படத்தில் சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சுவாசிகா நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக ஜெய்ராமும் அவருக்கு ஜோடியாக ரீத்து என்பவரும் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சோனா நடிக்கிறார். இவர்களுடன் கராத்தே ராஜா, மோகன்ராம், விஜய் கிருஷ்ணராஜ், மீரா கிருஷ்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சேலம் அருகிலுள்ள பரமத்திவேலூர் என்ற ஊரில் நடைபெற்றது. மூன்று ஆறுகள் ஒன்று சேரும் கூடுதுறை என்ற இடத்தில் உள்ள ஆற்றை படகில் கடந்து அங்கிருந்த மணல் திட்டின் மீது படப்பிடிப்பை நடத்தினார்கள். ஆற்றைக்கடந்து மணல் திட்டுக்குப் போகும்போதே ஊர்க்காரர் ஒருவர் முதலைகள் இருப்பதை சொல்லி எச்சரித்திருக்கிறார். சைதன்யா-சுவாசிகாவை வைத்து காதல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும் போதே, 20 அடி தூரத்தில் நீரில் ஏதோ மிதப்பது போல தெரிய, பிறகு தான் அது முதலை என்று தெரிந்திருக்கிறது. என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவியாய் தவித்த படக்குழுவினருக்கு, அந்த ஊரைச்சேர்ந்தவர் கையில் உள்ள பிஸ்கட்டை எல்லாம் வெகு தூரத்தில் வீசி எறியுங்கள் முதலை அதை நோக்கிப் போகும் போது நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படியே செய்து முதலையிடம் இருந்து படக்குழுவினர் தப்பித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.சரணா. இவர் திரைப்படக் கல்லூரி மாணவர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், நாவரசன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
Comments
Post a Comment