சம்பாதிக்க அல்ல, கைத்தட்டல் வாங்கத்தான் சினிமாவுக்கு வந்தேன் - பிரகாஷ்ராஜ்!!!

Monday, April 02, 2012
நான் சினிமாவில் நடிக்க வந்தது சம்பாதிக்க அல்ல, பெயர் புகழ் கைத்தட்டலுக்காகவே என்றார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜுக்கு ஹைதராபாத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பிரபல இயக்குனர் தாசரி நாராயணராவ், சிரஞ்சீவி சகோதரர் நாகாபாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

பிரகாஷ்ராஜுக்கு நடிகர்கள் சித்தார்த், சுனில் ஆகியோர் இணைந்து நினைவு பரிசு வழங்கினர்.

விழாவில் தாசரி நாராயணராவ் பேசும்போது, ''பிரகாஷ்ராஜின் டூயட் படத்தில் இருந்து அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். இயக்குனர் பாலச்சந்தர் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை திரையுலகுக்கு அளித்து உள்ளார். எந்த வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பவர் பிரகாஷ்ராஜ்'' என்று பாராட்டினார்.

பிரகாஷ் ராஜ் தனது ஏற்புரையில், "நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் கல்லூரி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்தேன். என் நடிப்பை பார்த்து எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த கைத்தட்டல்தான் இன்று என்னை நடிகனாக்கி விட்டது.

இன்றும் நான் கைத்தட்டல் பெறவே நடித்து வருகிறேன். சம்பாதிக்க அல்ல. நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்க கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தருக்கு நன்றிகடன் செலுத்த எனது வாழ்நாள் போதாது. அதேபோல தெலுங்கில் 5 இயக்குனர்களுக்கு நான் கடமைப்பட்டு உள்ளேன். கிருஷ்ணவம்சி, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம், குணசேகர், விநாயக் ஆகியோர் பசியுடன் வந்த எனக்கு தீனி போட்டார்கள்.

அவர்களுக்கும் வாழ்நாள் முழுக்க கடன்பட்டுள்ளேன்," என்றார் பிரகாஷ்ராஜ்
.

Comments