குழந்தையை கடத்தி என்னை கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: நடிகை அல்போன்சா கமிஷனரிடம் புகார்!!!

Monday, April 02, 2012
நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத்குமார். கடந்த மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வினோத்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அல்போன்சா மீது புகார் செய்தனர். தற்கொலை குறித்து, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்த அல்போன்சா பின்னர் அதனை வாபஸ் பெற்றார். நேற்று நிருபர்களை சந்தித்த அவர் யாருக்கும் பயந்து நான் ஓடி ஒளியவில்லை. வினோத்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. பெற்றோர் பணம் கேட்டு துன்புறுத்தியதால்தான் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அல்போன்சா திடீரென வந்தார். அங்கு புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வினோத்குமார் தற்கொலை செய்த அன்று அவரது தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் என்னை கடுமையாக தாக்கினர். எனது பார்ஸ்போர்ட்டையும் அவர்கள் எரித்து விட்டனர். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன்.

வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது பணம் கேட்டு என்னை மிரட்டும் பாண்டியன் எனது குழந்தையை கடத்தி சென்று விடுவதாக கூறுகிறார். என்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவதூறான வார்த்தைகளால் என்னை அவர் திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அல்போன்சா நிருபர்களிடம் கூறியதாவது:-

காதலன் வினோத்குமாருடன் வாழவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது. எனது குழந்தைக்காக நான் வாழ விரும்புகிறேன். வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் 3-ம் நபர் ஒருவரின் தலையீடு உள்ளது. எனது பாஸ்போர்ட்டை எரித்தது தொடர்பாகவும், மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் இன்று புகார் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments