காமெடிக்கு வயசே கிடையாது பாராட்டு விழாவில் நடிகை சச்சு பேச்சு!!!

Sunday, April, 08, 2012
சென்னை::காமெடிக்கு வயசே கிடையாது காமெடியை விரும்பித்தான் நடித்தேன் என்று நடிகை சச்சு கூறினார். தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் சித்திரை நாடக விழா மற்றும் நடிகை சச்சுவுக்கு பாராட்டு விழாவையும் சபாவை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் நாடகம் மற்றும் சினிமாவில் சிறப்பாக நடித்திருப்பதை பாராட்டும் விதமாக நடிகை சச்சுவுக்கு நாடக சிரோன்மணி விருது வழங்கி சபா குழுவினர் பாராட்டினார்கள். விருதைப்பெற்றுக்கொண்ட பின்னர் நடிகை சச்சு கூறியதாவது:- எனக்கு முதல் படம் ராணி கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ் மூலம் அறிமுகமானேன். தொடர்ந்து பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். படம் நடிக்கும் போது டி.எஸ்.பாலையாதான் நாடகத்தில் நடிக்க கட்டாயப்படுத்தினார். வாணிகலா மந்தீர் சபா மூலம் நாடகத்தில் நடித்தேன். பிறகு 20 நாடகங்கள் தயாரித்துள்ளேன். 1500 நாடகங்கள் ஸ்டேஜ் செய்திருக்கிறேன். எனக்கு எங்க அப்பா அம்மாவை விட என் பாட்டிதான் குரு. அவர் தான் முதல் டயலாக் சொல்லிக்கொடுத்தார். அப்போதெல்லாம் ட்ராமா இல்லாம படத்தில் ஒரு டயலாக் பேச முடியாது. இப்படி டயலாக் பேசி நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. குறிப்பாக வீரத்திருமகன், அன்னை இல்லம் , என பல படங்களை சொல்ல முடியும். எம்.ஜி.ஆர். அண்ணன் கூட நடித்துக் கொண்டிருக்கும் போது திடீர் என்று நாடக குழுவை சேர்ந்தவர்கள் நடிக்க கூப்பிடுவார்கள். அண்ணனிடம் சொல்வேன் நாடகம் தான் முக்கியம் உடனே போ என்று சொல்லுவார். அந்தளவுக்கு நாடகத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள் விசு, ரமணி, வெங்கட் என பலர் நாடகத்தை அழகாக அமைத்துக் கொடுத்தவர்களில் குறிப்பிடலாம்.
நாடகங்கள் மூலம் சினிமாவிற்கு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டேன் இதில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வாய்ப்புகள் அதிகம். காமெடிக்கு வயசே கிடையாது, காமெடியை சந்தோஷமாகத்தான் ஏற்றுக்கொண்டேன். இன்று எல்லோரும் பாராட்டும் படி உங்கள் முன் நிற்கிறேன். இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா எனக்கு பொருத்தமான அருமையான ஒரு பணியை இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு காலம் முழுவதும் நன்றி கடன் பட்டுயிருக்கிறேன். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வேன். என்னை பாராட்டிய ஸ்ரீ கிருஷ்ணா நாடக சபா குழுவினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நடிகைகள் காஞ்சனா, பாடகி பி.சுசிலா ராஜசுலோசன ராஜஸ்ரீ வைஜெயந்திமாலா, சித்ராலயா கோபு, நடராஜ் (டி.என்.பி.எஸ்சி குழு தலைவர்) சச்சுவின் அக்கா மாடிலட்சுமி, இசையமைப்பாளர் தேவா என பலர் கலந்துக் கொண்டனர் .விழாவை சபாவை சேர்ந்த ஒய். பிரபு கவனித்தார்.

படவிளக்கம்
ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில் நடிகை சச்சுவுக்கு நாடக சிரோன்மணி விருது வழங்கப்பட்டது. அப்போது நடராஜ் (டி.என்.பி.எஸ்சி தேர்வு குழு தலைவர் ) நடிகைகள் காஞ்சனா, வைஜெயந்திமாலா, ராஜஸ்ரீ, ராஜசுலோசனா, பாடகி பி.சுசிலா ஆகியோர் உள்ளனர்.

Comments