பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக் தொடங்கியது, 35 படங்களின் ஷூட்டிங் முடக்கம்!!!

Friday, April, 06, 2012
சென்னை::சினிமா தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இதையடுத்து 35 படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. பல கோடி ரூபாய் முடங்கும் நிலை உருவாகியுள்ளதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இடையே சம்பள பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்னையில் தொழிலாளர் நல ஆணையம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்மூலம் பெப்சியில் உள்ள 23 யூனியன்களில் 15,க்கும் அதிகமான யூனியன் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி முடிவானது. மற்ற சங்கத்தினருக்கான சம்பளம் நிர்ணயிப்பதில் இழுபறி நிலவியது. இதற்கிடையே, தமிழ் படத்தின் படப்பிடிப்பை பெப்சி சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதாக கூறி தயாரிப்பாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். ‘இனி புதிதாக தொடங்கவுள்ள தொழிலாளர்கள் சங்கங்களுடன்தான் வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

பிரச்னையை தீர்க்க, இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர்கள் நல ஆணையம் அழைப்பு விடுத்தது. அதில் பெப்சி தரப்பில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர்கள் புறக்கணித்தனர். புதிய தொழிலாளர் அமைப்புடன் சேர்ந்து மே 2,ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கும் பெப்சி தொழிலாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். தயாரிப்பாளர்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் தொழிலாளர்கள் அனைவரும் ஏப்ரல் 7,ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று பெப்சி அறிவித்தது. தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அறிவித்தபடி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை பெப்சி இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து பெப்சி பொதுச் செயலாளர் சிவா கூறும்போது, நாங்கள் வேலை செய்ய தயாராக இருந்தோம். பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருந்தோம். ஆனால், தயாரிப்பாளர்கள் அதை ஏற்கவில்லை. புதிய அமைப்புடன் வேலை தொடங்குவோம் என்று முதலில் அறிவித்தனர்.

கடந்த 2 நாட்களாக வேறு யாராவது தொழிலாளர் அமைப்பு தொடங்கினால் அவர்களுடன் பணியாற்றுவோம் என்று கூறி வருகின்றனர். இது அவர்களின் தோல்வியையே காட்டுகிறது. தொழிலாளர் ஆணையம் முன்னிலையில் மீண்டும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை பெப்சி வேலை நிறுத¢தம் தொடரும். இதனால், 35 படங்களின் ஷூட்டிங் நடக்காது. மேலும் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகளுக்காக காத்திருக்கும் படங்களும் பாதிக்கும். தயாரிப்பாளர்களின் போக்கு குறித்து அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக தொழிலாளர் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார் என்றார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் டி.சிவா, செயலாளர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் டிஜிபி ராமானுஜத்தை நேற்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் சனிக்கிழமை படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ‘போலீஸ் பாதுகாப்புடன் படப் பிடிப்புகள் நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Comments