
'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஆட்டு நல்லி எலும்பை அனாயாசமாக கடித்து மெல்லும் ராஜ்கிரணில் ஆரம்பித்து 'நந்தா'வில் புதுக்கோட்டை அரச வாரிசாக நடித்து பாராட்டுகளை அள்ளிக்கொண்டது வரை ராஜ்கிரண் இந்த 60 வயதிலும் ஆக்ஷன் ஹீரோதான்! அதேபோல இப்போதும் ராஜ்கிரணின் சம்பளம் குறையவே இல்லை. ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தாலும், கதையும் சம்பளமும் திருப்தியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா முதன் முதலாக இயக்கிய படம்தான் 'பகடை'. இதில் ராஜ்கிரண்தான் ஹீரோ. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அந்தப் படத்தை தொடர முடியாமல் போனது தயாரிப்பாளரால். வேறு வழியில்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட 'பகடை', மீண்டும் ராஜ்கிருஷ்ணாவின் முயற்சியால் வளரப் போகிறது. முன்பு பேசிய அதே சம்பளத்தை அதிகப்படுத்தாமல் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ராஜ்கிரண். கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தின் பெயரையும் உத்சவமூர்த்தி என்று வைத்திருக்கிறார்களாம். தெலுங்கிலும் ராஜ்கிரணுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுக்க இருக்கிறார்கள். ராஜ்கிரண் என்றாலே கதாபாத்திரத்தோடு ஐக்கியமாகி விடும் அசத்தல் நடிகர். இந்தப் படம் அவருக்கு 50-வது படம் என்பதால் நிச்சயமாக ஒரு அதிரடியை எதிர்பார்க்கலாம்! பின்ன என்ன.. சந்தோஷமா பகடைய உருட்டுங்க.......
Comments
Post a Comment