கர்ணன் வெற்றியால் கோலிவுட் குஷி ஓடாத படங்களும் மறு ரிலீஸ் ஆகிறது!!!

Saturday, March 24, 2012
சிவாஜி நடித்த ‘கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து, சமீபத்தில் வந்த தமிழ் படங்களை கூட ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கடந்த 40 வருடத்துக்கு முன்பு வெளி யான படம் ‘கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி, என்.டி.ராமராவ், அசோகன், சாவித்ரி, தேவிகா நடித்திருந்தனர். இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ரசிகர் களிடையே வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் வெளியாகி வரவேற்பை பெறாமல் போனபடங்களை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ‘வெங்காயம் என்ற படத்தை இயக்குனர் சேரன் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார். ‘இப்படத்தில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் ரிலீஸ் சரியான விதத்தில் செய்யப்படவில்லை. எனவே போதுமான பப்ளிசிட்டிக்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளேன்‘ என்றார் சேரன். அதேபோல் எஸ்.பி.சரண் தயாரித்த ‘ஆரண்ய காண்டம் படமும் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் வென்றது. சமீபத்தில் இப்பட இயக்குனருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது வெற்றி பெறவில்லை. ‘கர்ணன் பட வெற்றி எதிரொலியாக இப்படமும் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வா நடித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படம் முக்கிய காட்சிகள் சில தணிக்கையில் கட் செய்யப்பட்டு யு சான்றிதழுடன் ரிலீஸ் ஆனது. அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்து ஏ சான்றிதழுடன் மறுபடியும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

Comments