'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா - அமீர் காரணமா?.

Tuesday, March 13, 2012
கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என பெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த எதிர்ப்பின் பின்னணியில் இயக்குநர் அமீர் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையம் அருகே இன்று அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது.

ஃபெப்சி பிரச்சனையால் தமிழ் சினிமாவில் தற்போது எல்லா படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஷூட்டிங் மட்டும் எப்படி நடத்தலாம் என பெப்சி அமைப்பினர் நேரில் கேள்வி எழுப்பினர். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரகளை ஏற்பட்டது. பிரச்சனை முடியும் வரை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று தயாரிப்பாளரை ஃபெப்சி தொழிளாலர்கள் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தயாரிப்பு தரப்பில் கூறுகையில், "இயக்குனர் அமீரின் தூண்டுதலால்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். பருத்தி வீரன் தகராறை மனதில் வைத்துக் கொண்டு இவ்வளவும் செய்கிறார்," என்றனர்.

தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி தொழிளலார்களுக்கும் இடையே சம்பள விஷயத்தில் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பெப்சி சார்பில் பேசவும் முடிவெடுக்கவும் அமீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

எனவேதான், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதில் அமீருக்கு பங்கிருக்கலாம் என ஞானவேல்ராஜா கருதுகிறார்.

ஆனால் இதுகுறித்து அமீர் கூறுகையில், தொழிலாளர்களின் நலனைக் கருதி அவர்களுக்காக பேசுவதுதான் என் பொறுப்பு. என் சொந்தப் பிரச்சினைக்காக அவர்களைப் பயன்படுத்துமளவுக்கு நான் இறங்கிப் போக மாட்டேன். திரையுலகில் அனைவரும் பெப்சி பிரச்சினை முடிவுக்கு வருவதற்காக காத்திருக்கும் சூழலில், ஒரு சிலர் அதை மீறியதால் வந்த பிரச்சினை இது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை," என்றார்.

Comments