காமெடிதான் தமிழ் சினிமாவின் இரண்டாவது சூப்பர் ஸ்டார்! - விவேக்!!!

Saturday, March 10, 2012
தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இரண்டாவது சூப்பர் ஸ்டார் காமெடிதான் என்றார் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்.

காவேரி பிக்சர்ஸ் மற்றும் விஜயா பிலிம்ஸ் சார்பில் விஜயகுமாரி, டி.கே.குமரன், பாலாஜி பெரியசாமி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கஞ்சா கூட்டம்'. கஞ்சாவால் இளைஞர்கள் அழிவதை தடுக்கும் நோக்கில் உருவாகியுள்ள படம் இது. டி.எஸ்.திவாகர் இயக்கியிருக்கிறார்.

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே திவாகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசையும் இவர்தான்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக், கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார்.

தனது பேச்சின்போது, "முன்பெல்லாம் ஒரு படம் நான்கு திரையரங்குகளில் வெளியாகி நூறு நாட்கள் ஓடும். இன்று நூறு திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்கள் ஓடுகின்றன. எப்போ ரிலீசாகுது, எப்போ தூக்கப்படுதுன்னே தெரியவில்லை.

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் கட்டாயம் வெற்றி பெறும் என்பது நிச்சயமில்லை. அதேபோல சின்ன படங்கள் தோல்வி அடையும் என்பதும் கிடையாது. படங்களை சின்ன பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டம் வந்தாலும் தாங்க முடியும்.

படத்தின் தலைப்பைப் பார்த்தாலே இதில் நல்ல காமெடி இருக்கும் என்று தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒன்று நல்ல கதையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக படத்தில் நல்ல காமெடி காட்சிகள் இருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இரண்டாவதாக ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார். அதுதான் காமெடி. ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு பிரமாதமான காமெடி இருந்தாலே போதும் ஒரு படம் பிழைத்துகொள்ளும். கஞ்சா கூட்டம் பிழைச்சுக்கும்னு நம்பறேன்," என்றார்.

Comments