எம்ஜிஆர், ரஜினி, கமல் பற்றி மலரும் நினைவுகளில் மூழ்கிய ராஜேஷ் கன்னா!!!

Saturday, March 24, 2012
சமீபத்தில் பாலிவுட்டின் சாதனை நடிகர் ராஜேஷ் கன்னாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா.

பிரபுதேவா இந்தியில் இயக்கியுள்ள படம் ‘ரவுடி ரத்தோர்’ விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர ஒரு இந்திப் படம், ஐபிஎல் துவக்கவிழா என படுபிஸியாக உள்ள பிரபு தேவாவுக்கு, பாலிவுட்டின் எவர்கிரீன் ரொமான்டிக் ஹீரோ ராஜேஷ் கன்னாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்பது நெடு நாள் ஆசை.

அந்த ஆசை அவரது நண்பர் மூலம் நிறைவேறியுள்ளது சமீபத்தில்.

ராஜேஷ்கன்னாவைச் சந்தித்தது பற்றி பிரபுதேவா கூறுகையில், "ராஜேஷ் கன்னாவைச் சந்தித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. அவரது எல்லா படங்களையும் நான் பார்த்துள்ளேன். எனது தந்தையும் அவருக்கு தீவிர ரசிகர். என்னை வீட்டுக்கு அழைத்து தேநீர் கொடுத்தார். தென்னிந்திய திரையுலகில் தனக்குள்ள தொடர்புகள் குறித்து நிறைய பேசிக்கொண்டு இருந்தார்.

ராஜேஷ் கன்னா நம்பர் ஒன் நடிகராக இருந்த காலத்தில் பெரும்பாலான இந்திப் படங்கள் சென்னையில்தான் நடந்துள்ளன. அப்போது சோழா ஓட்டலில் அவருக்கு நிரந்தரமாக அறை ஒன்று இருக்குமாம். அங்கே தங்கி இருந்தது, காலை வேளைகளில் நியூ உட்லண்டஸ் ஓட்டலில் ஆவி பறக்கும் இட்லியும் மணக்க மணக்க காபியும் குடித்த நாட்களை அவ்வளவு ஆசையாக சொன்னார்.

குறிப்பாக அமரர் எம்.ஜி.ஆர். படங்களை ஹாத்தி மேரா சாத்தி, அப்னா தேஷ் என இந்தியில் ரீமேக் செய்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான நட்பு, கமலின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை இந்தியில் ‘ரெட் ரோஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தது என பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"அப்போதெல்லாம் தென்னிந்திய சினிமா எத்தனை கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக்கதாக இருந்தது தெரியுமா.. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்," என்றாராம் ராஜேஷ் கன்னா.

Comments