தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற அசின்: தற்போது கோலிவுட் பக்கம் திரும்பும் எண்ணமே இல்லையாம்!!!



Wednesday,March,21,2012
கேரளாவைச் சேர்ந்த அசின், தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர். இவருக்கு இப்போதைக்கு கோலிவுட் பக்கம் திரும்பும் எண்ணமே இல்லையாம்.

பாலிவுட்டில் 3 படங்களில் நடித்து முடித்துவிட்டவர் அசின். தற்போது அவரது 4வது படம் ஹவுஸ்புல் 2 ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது.

அவரை சந்தித்து பாலிவுட் அனுபவம் எவ்வாறு உள்ளது என்று விசாரிக்கக் கிளம்பினோம். வரவேற்பே படு அமர்க்களமாக இருந்தது.

இனி அவரே பேசுகிறார்..

இப்போதுதான் பாலிவுட் எனக்கு சற்று பரிச்சயமாகியுள்ளது. பாலிவுட்டிற்கென உள்ள ஸ்டைல், மொழி, பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போதுதான் பிடிபட்டுள்ளது. எனது அடுத்த படங்களில் நானே சொந்த குரலில் பேச உள்ளேன். இதனை நினைக்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது என்கிறார் கண்களில் உற்சாகம் பொங்க.

நான் எங்கு போனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படத் தயாரிப்பாளர்களை மறக்க மாட்டேன். அவ்வப்போது எனக்கு நல்ல படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு தமிழிலோ, தெலுங்கிலோ படம் பண்ணும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மிகச் சிறந்த கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் சற்று ஆறுதலாகப் பேசினார்.

கோலிவுட்டில் எப்போதுமே இயல்பான, ஒரே சமயத்தில் வெவ்வேறு வகையான கதைகள் திரைப்படமாக எடுக்கப்படும். கோலிவுட்டில் பணியாற்றியதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

நிச்சயமாக எனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது என தன்னம்பிக்கையோடு பேசுகிறார் நம்ம அசின்.

வாழ்த்துகளைக் கூறி விட்டு விடை பெற்றோம் நாம்.. மகிழ்ச்சி துள்ளலோடு படப்பிடிப்பிற்கு கிளம்பினார் அம்மணி.

Comments