தயாரிப்பாளர்-பெப்சி தகராறினால் தள்ளிப்போன படங்கள்!!!

Thursday, March 22, 2012
சினிமா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகிறார்கள். வேலை நிறுத்தம், உண்ணாவிரதங்களை நடத்தினர். இதையடுத்து அரசு தொழிலாளர் நல ஆணையம் இதில் தலையிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள நிர்ணய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சம்பளத்தை கூட்டி தராத தயாரிப்பாளர்கள் படங்களில் தொழிலாளர்கள் பணியாற்ற மறுப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில தயாரிப்பாளர்கள் ஊதியத்தை அதிகரித்து கொடுக்க முன்வந்தனர். அவர்கள் படங்கள் முடங்காமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்கள் மோதலால் நிறைய படங்கள் முடங்கி உள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் தவிப்பாகி இருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விதார்த் நடிக்கும் 'காட்டு மல்லி' படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இவர்கள் தகராறினால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய் உள்ளது. தனுஷின் '3' படம் கடந்த பொங்கலுக்கே ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வருகிற 30-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் காதலர் தினத்தில் ரிலீசாவதாக இருந்தது. தற்போது அப்படம் ஏப்ரல் 6-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அஜித்தின் 'பில்லா 2' படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ல் ரிலீசாவதாக இருந்தது. பெப்சி போராட்டத்தால் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சூர்யாவின் 'மாற்றான்' படம் ஏப்ரலில் ரிலீசாக இருந்தது. அப்படத்தை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். கார்த்தியின் 'சகுனி' படம் பொங்கலுக்கு வர இருந்தது. அதை ஏப்ரல் 13-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். ரஜினியின் 'கோச்சடையான்' படத்தை சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 15-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. கமலின் 'விஸ்வரூபம்' படம் மே மாதம் வருவதாக இருந்தது. தற்போது அது ஜூலைக்கு தள்ளிப்போகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறியிருக்கு.. எப்ப இறங்கும்னு தெரியல....

Comments