கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்தில் தப்பினார்-வித்யா பாலன்!:-சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன் வித்யாபாலன்!

Saturday, March 3, 2012
கோல்கட்டா ரயில் நிலையத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார்.
இந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகை வித்யா பாலன். இவர் சமீபத்தில் வெளியான, "டர்ட்டி பிக்சர்' படத்தில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, அவர் தற்போது, "கஹானி' என்ற இந்திப் படத்தில், கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை நடந்தது.

அதில், நடிகை வித்யா பாலன் பிளாட்பாரத்தில் பின்னோக்கி செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த எடை பார்க்கும் மெஷினில் மோதினார். இதனால், நிலை தடுமாறிய அவர், பிளாட்பாரத்தில் இருந்து, கீழே இருந்த ரயில் பாதையில் விழப் போனார்.
அவருக்கு அருகிலேயே, கேமராவுக்கு பின் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த, இயக்குனர் சுஜோய் கோஷ், வேகமாக ஓடிச் சென்று, கீழே விழாமல் வித்யாவை தாங்கிப் பிடித்தார். இதனால், வித்யா பாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயில் பாதையில் விழுந்திருந்தால், அவர் தலையில் பலத்த அடிபட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் அல்லது அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தாலும், விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன் வித்யாபாலன்!!!

வித்யாபாலன் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Comments