புதிய நடிகர்களுக்கு ரஜினி, கமல் வாழ்த்து!!!

Friday, March 2, 2012
நாங்க என்ற படத்தின் மூலம் 10 பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும்.

பிரபல பாடகர் மனோ, இயக்குநர் சந்தானபாரதி உள்பட 10 பிரபலங்களின் வாரிசுகளை தனது நாங்க படத்தில் அறிமுகப்படுத்துகிறார் செல்வா.

படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனைபேருமே சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸனை சந்தித்து வாழ்த்துப் பெற விரும்பினார்கள்.

ரஜினியைச் சந்திக்க மனோ ஏற்பாடு செய்திருந்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அனைவரையும் சந்தோஷத்துடன் வரவேற்ற ரஜினி, இயக்குநர் செல்வாவிடம் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். குறிப்பாக எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை என்பதைக் கேட்டு, “நல்ல விஷயம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தெரியுது… நல்லா வரும். வாழ்த்துக்கள்,” என்று ஆசீர்வதித்துள்ளார்.

கமல்ஹாஸனைச் சந்திக்க இயக்குநர் சந்தான பாரதி ஏற்பாடு செய்திருந்தார். புதியவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன கமல், புதியவர்கள் குறிப்பாக வாரிசுகள் வருவது நல்லதுதான், என்றாராம்.

Comments