கோலிவுட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி பட்டம்!!!

Thursday, March 08, 2012
கோலிவுட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு, இப்போது கனவுக்கன்னி என்ற பட்டமும் கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் இந்தபட்டத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது.

கோலிவுட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். எடுத்த எடுப்பிலேயே தனுஷூடன் மாப்பிள்ளை படத்தில் நடித்த ஹன்சிகா, அடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் எப்போதும், விஜய்யுடன் வேலாயுதம் என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஹன்சிகாவின் அழகான சிரிப்பும், அம்சமான உடல் அமைப்பும், அவரது துறுதுறு நடிப்பும் தமிழ் நாட்டு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

தற்போது உதயநிதியுடன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிம்புவின் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர விஷாலை வைத்து, சுந்தர்.சி இயக்கும் படத்திலும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் ஒன்று நடிகை ஹன்சிகாவுக்கு கனவுக்கன்னி என்ற பட்டத்தை வழங்கி இருக்கிறது. இதற்காக சிங்கப்பூரில் முகாமிட்டு இருக்கிறார் ஹன்சிகா. இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று என்னை அழைப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதை பெற்றது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இந்த பட்டம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து அதை தக்க வைத்து கொள்ள முயலுவேன் என்று கூறியிருக்கிறார்.

Comments