இந்தியன் காப்பி கல்சர் - ஓர் அறிமுகம்!!!

Monday, March 05, 2012
இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலு‌ம், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பே‌ர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும்.

இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்‌‌பி, ஆய்தஎழுத்து அமெரோஸ் பெரோஸின் காப்பி என்று கண்டமேனிக்கு எழுதினால் யாருக்கு கோபம் வராது? சுஹாசினி இப்படிப்பட்டவர்களை திட்டி தீர்த்திருக்கிறார். எத்தனை டிவிடிகளைப் பார்த்து தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த காப்பி கண்டுபிடிப்பு இப்போது ஒரு நோயாகிவிட்டது. பேரரசின் தருமபுரியில் கூட உலக சினிமாவின் சாயல் தென்படுகிறதா என்று லென்ஸ் வைத்து பார்க்கிறார்கள். சமீபத்தில் வந்த கோ படத்தில் அரசியல்வாதியாக வரும் அஜ்மல் ஜீவாவை ஏமாற்றிவிடுவார். கமலின் சத்யா படத்திலும்கூட அரசியல்வாதி கிட்டி கமலை ஏமாற்றுவார். உடனே சத்யாதாண்டா கோ என்று அடித்துவிட்டார்கள். எந்தப் படமாக இருந்தாலும் தங்களுடைய விமர்சன கோணிப் பையில் அடைத்துவிட வேண்டும். அப்படி ஒரு வெறி.

இந்த கோணிப்பை இப்போது அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது காப்பி அடித்து படமெடுக்கலாமா? அப்படி எடுத்தால் அது தவறா? இல்லை, காப்பி அடித்துவிட்டு அது பற்றி சொல்லாமல் கம்மென்றிருந்துவிடுவது தவறா? நந்தலாலா, தெய்வத்திருமகள் விஷயத்தில் இதுதான் நடந்தது. நந்தலாலா கிகுஜிரோவின் காப்‌பி, தெய்வத்திருமகள் ஐயம் சாமின் காப்‌பி. இதை எடுத்தவர்கள் அதுபற்றி மூச்சே விடவில்லை. இது தேசத்துரோகம் என்று ஒரு கோஷ்டி. இதிலென்ன துரோகம்... உலக சினிமா பார்க்காதவங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களுக்கு இது யூஸ் ஆகுமே என்று இன்னொரு கோஷ்டி. காப்பி தப்பில்லை, ஆனா எந்தப் படத்தோட காப்பிங்கிறதை நேர்மையா சொல்லிடணும் என்ற நேர்மை விளம்பிகள் இன்னொரு பக்கம்.

இந்த கோஷ்டி சண்டையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. எந்தப் படம் அல்லது எந்தக் காட்சி எந்தப் படத்திலிருந்து சுடப்பட்டது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். அந்த ஆவலை பூர்த்தி செய்யதான் இந்த காப்பி கல்சர். ( உஷ்...ஒருவழியா தலைப்புக்குவிளக்கம் கொடுத்தாச்சி).

முதலில் விஜய் படத்திலிருந்து தொடங்கலாம்.

விஜய்க்கு ஸ்டெடியான மார்க்கெட்டை உருவாக்கித் தந்த முதல் படம் பூவே உனக்காக. இந்தப் படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சி மலையாளப் படமொன்றிலிருந்து உருவப்பட்டது. முதலில் மலையாளப் படத்தைப் பார்ப்போம்.

துளசிதாஸ் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த படம் மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி. இந்தப் படத்தில் முகே‌ஷ், சித்திக் இருவரும் நண்பர்கள். முகேஷ் இந்து, சித்திக் முஸ்ஸிம். சித்திக்கின் தந்தைக்கு, தனது மகன் தனது நண்பனின் பள்ளியில் வாத்தியாராக வேண்டும் என்று ஆசை. அந்த பள்ளி அவர்கள் ஊரிலிருந்து நெடுந்தொலைவில் உள்ளது. சித்திக்கிற்கோ வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசை. தந்தைக்கும் மகனுக்குமான இந்த கருத்து வேறுபாடு முற்றும் போது சித்திக் செய்யும் ஒரு கோல்மால்தான் கதை.

சித்திக்கின் தந்தையின் நண்பர் சித்திக்கை சின்ன வயதில் பார்த்திருக்கிறார், வளர்ந்த பிறகு பார்த்ததில்லை. அதனால் தனக்குப் பதில் முகேஷை அந்த வேலைக்கு அனுப்பிவிட்டு அவர் வெளிநாடு செல்ல மும்பைக்கு செல்வார். இப்போது முகேஷ் சித்திக்கின் பெயரில் வாத்தியாராக வேலை பார்ப்பார். அதாவது முஸ்லிமாக. இந்நிலையில் முகேஷின் ஊரிலுள்ள பெண் ஒருத்தி அவர் தற்போது வேலைப் பார்க்கும் ஊருக்கு திருமணமாகி வருவாள். அவளை திருமணம் செய்திருப்பது ஒரு ராணுவ வீரன். தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் முகேஷ் தன்னைப் பற்றிய உண்மையை அந்தப் பெண்ணிடம் கூறுவார். இதனை தொலைவிலிருந்து அப்பெண்ணின் கணவன் பார்ப்பான். அதே நேரம் முகேஷுடன் வேலை பார்க்கும் முஸ்லிமான ஜெகதி இந்த ரகசியத்தை ஒட்டுக் கேட்பார். முகேஷ் ஜெகதியின் பரம விரோதி. முகேஷைப் பற்றிய உண்மையை அப்பள்ளியின் தாளாளர் ஹாஜியாரிடம் சொல்ல ஜெகதி ஓடுவார். அவரைத் தடுக்க பின்னாலேயே ஓடுவார் முகேஷ். அதேநேர‌ம், தனது மனைவிக்கு‌‌ம், முகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அப்பெண்ணின் கணவன் துப்பாக்கியுடன் முகேஷை சுட பின்னாலேயே ஓடுவான். இந்த ரேஸில் அவன் சுடும் குண்டு ஜெகதியின் தொண்டையில் செருகிக் கொள்ளும்.

இப்போது ஜெகதியால் பேச முடியாது. மருத்துவமனையில் பேப்பரில் விஷயத்தை எழுதி நர்ஸிடம் கொடுக்க முயலும் போது முகேஷு‌ம், சித்திக்கும் அதனை பிடுங்‌‌கி, நர்ஸை பற்றி தவறாக எழுதியிருப்பதாகப் போட்டுக் கொடுப்பார்கள்.

இந்தக் காட்சியை விக்ரமன் அப்படியே சுட்டு பூவே உனக்காக படத்தில் வைத்திருப்பார். விஜய் அந்த வீட்டின் வாரிசு அல்ல என்பதையு‌‌ம், அவர் அங்கு வந்ததற்கான காரணத்தையும் சங்கீதாவிடம் சொல்வதை ஒருவன் மறைந்திருந்து கேட்பான். அதை சொல்ல அவன் ஓடும் போது கத்தி எறிந்து விளையாடுகிறவனின் கத்தி அவன் தொண்டையில் செருகிக் கொள்ளும். அவனால் பேச முடியாமல் போகும். ச‌ரி, விக்ரமனும் துளசிதாஸைப் போல் யோசித்திருப்பார் என்ற நினைத்தா‌ல், மருத்துவமனை லட்டர் காட்சியும் அடுத்து அப்படியே வரு‌ம்‌, ஈயடிச்சான் காப்பி. மலப்புறம் ஹாஜி மகனாய ஜோஷி 1994 ல் வெளியானது. பூவே உனக்காக 1996.

ஒட்டு மொத்தப் படத்தை காப்பி அடிப்பது போல இப்படி ஒட்டுப் போடும் காப்பியும் உண்டு. இதில் இன்னொரு விசேஷம் மலப்புறம் ஹா‌‌ஜி படத்தை முறைப்படி உரிமை வாங்கி ராமன் அப்துல்லா என்ற பெய‌ரில் பாலுமகேந்திரா தமிழில் இயக்கினார். அப்படத்தில் இந்த துப்பாக்கி சேஸிங் காட்சியை நீங்கள் பார்க்கலாம்.

இது ஒரு சின்ன சாம்பிள். இது போல் ஒரேயொரு காட்சியை சுட்டது, பல படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக உருவியது, ஒட்டு மொத்தமாக சுட்டது என பலவகைகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
இந்தியன் காப்பி படங்கள்!

Comments