சமரசம் பேசி நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயலவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!!!

Thursday,March,29,2012
நயன்தாராவும் பிரபு தேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஒரு வருடத்துக்கு முன் இருவரும் திருமணத்துக்கு தயாரானார்கள். பிரபு தேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்குப்போட்டார். கடைசியாக நடித்த 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' தெலுங்கு படப்பிடிப்பில் அவருக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா நடந்தது.

கண்ணீர் மல்க எல்லோரிடமும் விடை பெற்றார். பிரபுதேவாவும் முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். விரைவில் நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் என்று அறிக்கையும் வெளியிட்டார். இப்படி இருவரும் திருமணத் துக்கு தயாரான நிலையில் திடீரென காதலை முறித்துக் கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். மூன்று தெலுங்கு படங்களி லும் ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையில் நயன்தாராவைவும் பிரபுதேவாவையும் மீண்டும் சேர்த்து வைக்க நடிகை குஷ்பு முயற்சிப்பதாக செய்திகள் வெளியானது. இருவரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

பிரபுதேவாவும் நயன்தாராவும் எனக்கு நல்ல நண்பர்கள். பிரபுதேவாவை எனக்கு ரொம்ப நாட்களுக்கு முன்பே தெரியும். அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அறிவேன். பிரபு தேவா தனித்து முதன் முதலில் பாடலுக்கு நடனம் அமைத்தது எனது படத்தில்தான். நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்து நான் சமரசம் பேசவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்.

இருவரையும் மதிக்கிறேன். அவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கமாட்டேன். அவர்களுடன் நட்பை தொடர்வேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Comments