'கந்தா' படத்துக்கு தடை - சென்னை நீதிமன்றம் உத்தரவு!!!

Friday, March 16, 2012
நடிகர் கரண் நடித்த 'கந்தா' படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்தில் மோகன்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் கரண் நடிப்பில் 'கந்தா' என்ற சினிமா படத்தை வி.பி. பிலிம்ஸ் உரிமையாளர் பழனிவேல், அவரது மனைவி கல்பனா பழனிவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

படத் தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.25 லட்சத்தை 2009-ம் ஆண்டு வாங்கினார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 2 `செக்'குகள் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தினேன். ஆனால் அது காசாகவில்லை. அவர்களது கணக்கில் பணம் இல்லை என்று அந்த 'செக்'குகள் திரும்பி வந்துவிட்டன.

இதையடுத்து பழனிவேலுவிடம் பணத்தைக் கேட்டேன். அப்போது அவர் உத்தரவாத பத்திரத்தை எழுதிக் கொடுத்தார். ரூ.25 லட்சம் கடனை, 'கந்தா' படம் வெளியிடுவதற்கு முன்பு தந்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் எனக்கு பணத்தை திருப்பித்தராத நிலையிலேயே படத்தை வெளியிட பழனிவேலு முயற்சிக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலத் தடை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகத் தெரிவதால், 'கந்தா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அவர் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Comments