விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!!!

Tuesday, March 20, 2012
ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது.

விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ஏற்கெனவே சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழா விருது விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. ஆசியாவின் மிக முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஓசாகா விழா பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதில் விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படம், 'God's own Child' என்ற பெயரில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகள் அளிக்கப்பட்டன.

விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

Comments