கேன்ஸ் விழாவின் நேரடிப் போட்டிக்குப் போகிறது கமலின் விஸ்வரூபம்!!!

Friday, March 2, 2012
பொதுவாக கமல் படங்கள் குறித்து எக்கச்சக்க செய்திகள் வரும். ஆனால் விஸ்வரூபம் அதில் விதிவிலக்கு.

கூடுமானவரை இந்தப் படம் குறித்த தகவல்களில் ரகசியம் காத்து வருகிறார் கலைஞானி.

அப்படி தப்பித்தவறி கசிந்துள்ள ஒரு விஷயம்... இந்தப் படத்தை நேரடியாக கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்புகிறார் என்பது.

படத்தின் க்ளைமாக்ஸ் வரை வந்துவிட்ட கமல், அடுத்த ஒருமாதத்துக்குள் படத்தை முடித்து கேன்ஸ் விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "இந்தப் படத்தை கேன்ஸுக்கு அனுப்புவதும் என் நோக்கம்தான். ஆனால் இப்போதே அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்பவில்லை. குறித்த காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் என் முன் உள்ள சவால்.

கேன்ஸ் பட விழா ஏற்பாட்டாளர் கிறிஸ்டியன் ஜீனுடன் தொடர்பில் இருக்கிறேன். மார்ச் 15-க்குள் படம் தொடர்பான பணிகள் முடிந்துவிடும் என நம்புகிறேன்.

போட்டிப் பிரிவிலேயே விஸ்வரூபத்தைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளேன். அதற்கேற்ப கேன்ஸ் விழாக் குழுவினர் ஓரிரு நாட்கள் தேதிகளை மாற்றிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்," என்றார்.

இது மட்டும் நடந்துவிட்டால், கேன்ஸில் சர்வதேச போட்டிப் பிரிவில் நேரடியாகப் பங்கேற்கும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கிடைக்கும். கமலுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் கிரீடத்தில் இன்னும் ஒரு சிறகாக அது அமைந்துவிடும்!

Comments