மனைவி லதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஜினி!!!

Friday, March 2, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி, லதா ரஜினிக்கு இன்று பிறந்த நாள். இன்று வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார்.

ஸ்டெல்லா மாரீஸில் எம்ஏ வரை படித்தவர் லதா. கல்லூரியில் படிக்கும்போது ரஜினியை காதலித்து மணந்தார். சிறந்த குடும்பத் தலைவியாகத் திகழ்கிறார்.

சினிமாவில் ஒரு பின்னணிப் பாடகியாக தன் கேரியரை ஆரம்பித்தார் லதா ரஜினி. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் ரஜினி படத்தில் அல்ல... கமலின் டிக்டிக்டிக் படத்தில், இளையராஜா இசையில் ஒரு அட்டகாசமான பாடலுடன் தொடங்கினார். அடுத்து அன்புள்ள ரஜினிகாந்தில் கேட்பவரை உருக வைக்கும் 'கடவுள் உள்ளமே...' இவரது குரல்தான்.

அதன் பிறகு, பாடுவதை நிறுத்திவிட்ட லதா, கவனத்தை முழுக்க குடும்பத்தைக் கவனிப்பதிலும், ஆஷ்ரம் பள்ளியின் கல்விப் பணிகளிலும் செலுத்த ஆரம்பித்தார்.

இருந்தாலும் அவ்வப்போது மாணவர்களுக்காக தனி ஆல்பங்கள் பாடினார். மாணவர்களிடம் கடவுள் பக்தி, நல்லொழுக்கம், தமிழ் உணர்வை ஊட்டும் பாடல்கள் அவை.

ஆஷ்ரம் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இந்த பாடல்களை மாணவர்கள் பாடுவதைக் காணலாம். ரஜினியின் திரையுலக வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் 1999-ல் ரஜினி 25 எனும் ஆல்பத்தையும் உருவாக்கினார்.

இடையில் வள்ளி படத்தில் 'குக்கூ...', 'டிங் டாங்...' என இரு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார் லதா ரஜினி (1993). அந்தப் பாடல்கள் அடைந்த வெற்றியால் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தும், அவற்றை நாசூக்காக மறுத்துவிட்டார். லதா ரஜினி திரையில் பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் இசைஞானிதான் இசை!

"இந்த உலகில் கஷ்டப்படும் அத்தனை குழந்தைகளையும் அரவணைத்து அன்பு செலுத்த வேண்டும் என்பது என் ஆவல். இறைவன் அதற்கான சக்தியை எனக்குத் தரவேண்டும்," என்பது லதாவின் ஆசை. கல்வித் துறையில் தனது பங்களிப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார்.

அந்த ஆசை நிறைவேறட்டும்!

Comments