சினேகாவின் இடத்தைப் பிடிப்பீர்களா..?: விண்மீன்கள் நாயகி ஷிகா பதில்!!!

Sunday, March 18, 2012
தற்போது திரைக்கு வந்திருக்கும் 'விண்மீன்கள்' படத்தின் கதாநாயகி ஷிகா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கும் பெங்களூர் அழகியான ஷிகா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

திரைப்படத்துறையில் தங்களது அறிமுகம்..?

இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா (Galipatta) என்னும் கன்னட படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுடன் அதில் வரும் 'நதீம் தீம் தானா' என்கிற பாடலும் மிகவும் பிரபலமடைந்த்து. அதே பாடலில் நான் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது... தொடர்ந்து வாரேவா, மயதானத மலே, காகன சுக்கி ஆகிய கன்னடப் படங்களின் நடித்தேன்.

தமிழுக்கு எப்படி வந்தீர்கள்...?

இயக்குனர் மதுமிதாவின் கொலகொலயா முந்திரிக்காவில் படத்தில் நான் அறிமுகமானேன். அதன் பிறகு இன்று விண்மீன்களில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.. விண்மீன்களில் அம்மாவாக நடித்திருக்கிறீர்களே..? ஆம், அந்தப் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் மேனன் என்னிடம் சொல்லியபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நான் நடிக்க ஒத்துக் கொண்டேன். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசிவிடும் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அதன் பெற்றோர் எவ்வளவு சிரத்தை எடுத்துப் பராமரிக்கின்றனர்.

அப்படிப் பட்ட ஒரு அம்மாவாக நான் நடித்ததில் எனக்குப் பெருமையே... செரிப்ரல் பால்ஸி (Cerebral palsy) என்னும் ஒருவகைக் குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு மூளையைத் தவிர கிட்டத்தட்ட மற்ற பாகங்களின் இயக்கம் துண்டிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட பாதி இறந்த மாதிரிதான். இருந்தும் அந்தக் குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டி சமுதாயத்தில் மிகவும் நல்ல நிலைமைக்கு வளர்த்தெடுக்கும் அம்மா வேடம். அதற்காக காட்டன் புடவைகளையே கட்டி நடித்தேன்... மூன்றில் ஒரு பங்கு எடையையும் கூட்டினேன். எனக்கு அந்த அம்மா கதாபாத்திரம் ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது... அந்தப் பரீட்சையில் ரசிகர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது..

தமிழுக்கு வருவதற்கு முன் தமிழ் தெரியுமா..?

இல்லை... சுத்தமாகத் தெரியாது.... கொல கொலயா முந்திரிக்காவில் ஒப்பந்தமானவுடனே நானாகவே தமிழ் கற்கத் தொடங்கினேன்... வசனங்களைப் புரிந்து சரியான முகபாவனைகள் வெளிப்படுத்தத் தேவையான அளவிற்குத் தமிழைக் கற்றுக் கொண்டேன்... தமிழ் ஒரு அற்புதமான மொழி, இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்...

தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி..?

ஏ.எம்.ஆர்.இயக்கத்தில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் வனயுத்தம் படத்தில் சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனின் நண்பனான குருநாத்தின் காதலி சாந்தினியாக நடிக்கிறேன்... அது ஒரு காட்டுவாசிப்பெண் வேடம்.. முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது... மேக் அப் இன்றி காடு மலை என்று மிகவும் சிரத்தையெடுத்து நடிக்கிறேன்... துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டே நடக்க வேண்டும்... நிச்சயம் இந்தப் படம் எனக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித்தரும்... படம் பார்த்துக் கதை சொல் என்னும் படத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் போட்டோகிராபார் வேடம் ஏற்று நடிக்கிறேன்... முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது... எனக்கோ கேமராவைச் சரியாகப் பிடிக்கவே தெரியாது அந்தப் படத்தின் கேமரா மேன்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார்.... தருண் சத்ரியாவின் காதலியாக நடிக்கும் படம் பார்த்துக் கதை சொல் ஒரு ஆக்‌ஷன் படம்...

எந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை..?

எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எந்தவிதமான வேடங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறேன்...

விண்மீன்களில் புடவை கட்டி வந்த நீங்கள் சினேகா போல இருப்பதாகச் சொல்கிறார்கள்.. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் அவரது இடத்தைப் பிடிப்பீர்களா..?

நான் அடிப்படையில் சுஹாசினி, ரேவதியின் மிகப்பெரிய ரசிகை...சினேகாவின் ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்... என்னிடமும் பலர் சினேகாவைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள்... அதில் எனக்குப் பெருமை... எனக்கு மிகவும் மரியாதை கிடைத்ததைப் போல் உணர்கிறேன்... அதேசமயம் அவரது இடத்தைப் பிடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது...

தங்களது அழகின் ரகசியம்..?

சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்வதற்கு நல்ல புத்தகங்கள் படிப்பேன்... எல்லா நல்ல படங்களையும் விடாமல் பார்த்துவிடுவேன்.. மற்றபடி எனது நடனப்பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் என்னை அழகான உடம்புக்குச் சொந்தக்காரியாக வைத்திருக்கின்றன.

Comments