வெங்'காய'த்தால் காயமான சேரன்!!!

Monday, March 26, 2012
அதான் நா இருக்கேனே... என்று நர்ஸ் ஒருவர் டாக்டர் மயில்சாமிக்கு முட்டுக் கொடுக்க முயலும் நகைச்சுவை காட்சியை ஒருமுறை மனக்கண்ணில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து நாம் சொல்லப் போகும் மேட்டர் அதற்கு இணையானதுதான். தனது சொந்த முயற்சியால் ஒரு அற்புதமான படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டிருந்தார் சங்ககிரி ராஜ்குமார் என்ற இளைஞர். படத்தின் பெயர் 'வெங்காயம்'. நிஜமாகவே தமிழ்சினிமா இண்டஸ்ட்ரியை அதிர வைத்தது படம் அது. ஆனால் அப்படம் போய் சேர வேண்டிய இலக்கை அடையவே இல்லை. விளம்பரம் என்ற முதலைக்கு சில லட்சங்களையாவது அள்ளி இரைத்தால்தான் இப்படி ஒரு படம் வந்த தகவலே வெளியே தெரியும். அதுமட்டுமல்ல, சரியான தியேட்டரும் அப்புறம்தான் கிடைக்கும். இது இரண்டிற்கும் வழியில்லாமல் அழுகியே போனது 'வெங்காயம்'. இந்த நேரத்தில்தான் நா இருக்கேனே என்று நர்ஸ் போல வந்தார் சேரன். இப்படத்தை தனது செலவிலேயே இண்டஸ்ட்ரியின் முன்னணி இயக்குநர்களுக்கும் சில பொழுது போகாத பின்னணி(?) இயக்குநர்களுக்கும் போட்டுக் காண்பித்தார். அவர்களும் ஆஹா ஓஹோ என பாராட்டித்தள்ள, படத்தை நானே வெளியிடுகிறேன். கவலைப்படாதீங்க ராஜ்குமார் என்றாராம் சேரன். சேரன் பெருமையுடன் வழங்கும்... என்ற உபரி தகவலுடன் கடந்த வெள்ளியன்று படம் மறு ரிலீஸ் ஆனது. இந்த முறை படத்தின் டைட்டிலில் இருந்த 'வெங்' சுருக்கப்பட்டு 'காயம்' மட்டும் பெரிதாக்கப்பட்டது. 'காயம்' என்பதுதான் படத்தின் தலைப்பு. ஆனால் நல்ல நோக்கத்துடன் இப்படத்தை வெளியிட்ட சேரனுக்கும் ராஜ்குமாருக்கு நேர்ந்த கதிதான் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவுக்கு தியேட்டர்காரர்கள் ஒத்துழைக்கவில்லையாம். தமிழ் லாங்வேஜின் டாப்மோஸ்ட் நாளிதழில் கூட விளம்பரம் கொடுக்க முடியாதளவுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது அவருக்கு. இருந்தாலும் 'வெங்காய'த்திற்கு தோள் கொடுக்க வேண்டியது நமது சமூக கடமை என்பதால் மீண்டும் ஒருமுறை காயத்தை பார்த்து காயம்பட்ட உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுங்கப்பா.. ஐயோ! பாவம்.. உதவி செய்யப்போய் உபத்திரவத்துல மாட்டிக்கிட்டாரே.....

Comments