ஐம்பது வயசாயிடுச்சி... இனி வேணாம்! - தீபா!!!

Wednesday,March,14,2012
எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. இனி நடிப்பு வேணாம்னு ஒதுங்கிட்டேன். என் மகன், பேரப்பிள்ளைகளை நடிக்க வைப்பேன், என்கிறார் முன்னாள் நடிகை தீபா.

ரஜினியுடன் ஜானி, பாக்யராஜுடன் முந்தானை முடிச்சு உள்பட ஏராளமான படங்களில் கலக்கியவர் தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். பார்க்க இப்போதும் அதே களையான முகத்தோடு இருந்தாலும், இப்போது பாட்டியாகிவிட்டார்.

தீபாவின் கணவர் ரெஜாய் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். தீபா-ரெஜாய் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர், ரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வயதில் ரீஹான் என்ற மகனும் இருக்கிறான்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த தீபா, தனது மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டார். அவர் கூறுகையில், "எனக்கு இப்போது 50 வயசாகிடுச்சி. ஆனால் நான் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது கடவுளோட கிருபை.

'அந்தரங்கம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானேன். கடைசியாக நான் நடித்த தமிழ் படம், `முந்தானை முடிச்சு.' அதன்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்பதை நிறுத்திட்டேன்.

'வேணாம்.. போதும்'

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூர் என்ற இடத்தில், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். இப்போதும் எனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு குடும்பம் முக்கியம். அதனால் இனிமேல் நடிக்க மாட்டேன். ஜனங்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக நன்றி.

என் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அவனை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். மகனைப்போல் பேரனையும் சினிமாவில் நடிக்க வைக்க நான் ஆசைப்படுகிறேன். நான் நடிகை ஆனதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. பெருமைப்படுகிறேன்.

பைபிள் பிரசாரம்

இப்போது நடிக்கவில்லை என்றாலும், தியேட்டர்களுக்குப்போய் நிறைய சினிமா பார்க்கிறேன். அங்காடித்தெரு, நாடோடிகள் ஆகிய இரண்டு தமிழ் படங்களையும் சமீபத்தில் பார்த்து ரசித்தேன். என் காலத்து நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

தினமும் நான் 'பைபிள்' படிக்கிறேன். தியானம் செய்கிறேன். பைபிள் பிரசாரம் செய்து வருகிறேன். மிக சிறந்த சமூக சேவகியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை," என்றார்.

Comments