நடிகர் சிரஞ்சீவிக்கு 74 கோடி சொத்து!!

Wednesday,March,21,2012
ஐதராபாத்::நடிகர் சிரஞ்சீவிக்கு ரூ.74 கோடி சொத்து உள்ளது என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா உள்பட 14 மாநிலங்களில் இருந்து 58 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. ஆந்திராவில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, முன்னாள் மாநில அமைச்சர் கோவர்த்தன் ரெட்டி உள்பட 4 பேரும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் ரமேஷ், முன்னாள் மாநில அமைச்சர் தேவேந்தர் கவுடு ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது அளித்த விவரத்தின்படி, சிரஞ்சீவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.74 கோடி. இதில் ரூ.58 கோடி மட்டும் மனைவி பெயரில் உள்ளது. மேலும், 14 கிலோ தங்கம் மற்றும் வைரங்களும் உள்ளன. மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் ரபோலு ஆனந்த பாஸ்கருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான சொத்துகளே உள்ளன. முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ரூ.24 கோடி அசையா சொத்துகள் தனது பெயரிலும், ரூ.31.68 கோடி சொத்துகள் கணவர் பெயரிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தம்பதிக்கு அசையும் சொத்துகள் ரூ.11 கோடிக்கு உள்ளது. கோவர்த்தன் ரெட்டிக்கு ரூ.1.72 கோடி சொத்து அவரது பெயரிலும், ரூ.60 லட்சம் மனைவி பெயரிலும் உள்ளது. தேவேந்தர் கவுடுவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.149 கோடி. மேலும் 5.5 கிலோ தங்கமும் உள்ளது என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments