வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!!!

Wednesday,March,07,2012
தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.

Comments