2 வருடமாக கதை எழுதி, 50 நாட்களில் முடித்த படம் `வழக்கு எண் 18/9' - பாலாஜி சக்திவேல்!

Monday, March 19, 2012
வழக்கு எண் 18/9 படத்துக்காக, 2 வருடங்களாக கதை எழுதினேன். ஆனால், 50 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டேன்" என்று இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறினார்.

சாமுராய், காதல், கல்லூரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், `வழக்கு எண் 18/9' என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது.

தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படம், அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு வர இருக்கிறது. படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

அப்போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கல்லூரி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றதும், அடுத்த படத்தை மிக கவனமாக எடுக்க வேண்டும் என்ற பயம் எனக்கு வந்தது. அந்த சமயத்தில், அடுத்த படம் இயக்குவதற்காக டைரக்டர் லிங்குசாமி எனக்கு `அட்வான்ஸ்' கொடுத்தார்.

எந்த கதையை எடுப்பது, எதை எடுத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும்? என்று குழப்பமாக இருந்தது. நாள் ஆகிக்கொண்டே போனது. கதை ஒன்றும் அமையவில்லை. அதனால், கொடுத்த `அட்வான்ஸ்' தொகையை திருப்பிக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்போதுதான் `வழக்கு எண் 18/9' படத்தை பற்றிய கரு உருவானது. அதை முழுமையான திரைக்கதையாக உருவாக்குவதற்கு 2 வருடங்கள் ஆனது. ஆனால், படப்பிடிப்பை 50 நாட்களில் முடித்து விட்டேன்.

பொருளாதார ரீதியாக எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. என் மனைவி ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருக்கிறார். `டியூஷன்' எடுத்தாவது எனக்கு கஞ்சி ஊற்றி விடுவார்.வழக்கு எண் 18/9, ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும். காதல் உள்பட எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கிறது."

இவ்வாறு பாலாஜி சக்திவேல் கூறினார்

Comments