நடிகைகளுக்கான சிசிஎல் வச்சா நான் அவங்க டீம்ல சேர்ந்திடுவேன் - விஷால் 'கலகல'!!!

Tuesday, February 21, 2012
செம உற்சாகத்திலிருக்கிறார்கள் சென்னை ரைனோஸ் அணியின் நட்சத்தி கிரிக்கெட் வீரர்கள். காரணம் சமீபத்தில் நடந்த சிசிஎல் இறுதிப்போட்டியில், ஒரு கிரிக்கெட் வீரரால் உருவாக்கப்பட்ட பெங்களூர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருப்பதுதான்.

சென்னை அணி முழுக்க முழுக்க நடிகர்களால் நிறைந்திருந்தது. இவர்களில் சிலர் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காதவர்கள்தான். என்றாலும் அந்தக் குறையை கிரிக்கெட் மூலம் தீர்த்துக் கொண்டனர்.

ஆனால் கர்நாடக அணியை உருவாக்கியவர் குண்டப்பா விஸ்வநாத். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர். இந்த அணியில் பாதிப்பேர்தான் நடிகர்கள். மீதிப் பேர் பெயருக்கு நடிகர்கள். முழுமையாக கிரிக்கெட்டுக்காக தயார் செய்யப்பட்டவர்கள்.

ஆனால் இறுதிப் போட்டியில் சென்னை அணி கலக்கிவிட்டது. இந்த வெற்றியில் சில சர்ச்சைகள் இருந்தாலும், சென்னை வீரர்கள் விளையாடிய விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

சென்னை அணிக்கு நடிகர் விஷால் கேப்டனாகவும், விக்ராந்த் துணை கேப்டனாகவும் இருந்தனர். நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஆர்யா, விஷ்ணு, ரமணா, சாந்தனு, சிவா, பிருத்வி ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். குறிப்பாக விக்ராந்த், சாந்தனு, ஜீவா, ஆர்யா, ரமணா, கேப்டன் விஷால் ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் போலவே மாறிவிட்டனர்.

வெற்றி பெற்ற சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு நடிகர்களான ஆர்யா, ஜீவா தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர் (விஜய் கொடுத்த பார்ட்டியில் கொஞ்சம் ஓவராயிடுச்சாம்!).

இறுதிப்போட்டியின் போது கையில் அடிபட்டு காயமடைந்த விஷ்ணுவும் வந்திருந்தார். அவரிடம் காயம் குறித்து கேட்டதற்கு; ''இடது முழங்கையில் எலும்பு முறிந்து போனதால், ஆபரேஷன் செய்திருக்கிறேன். தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்'' என்றார்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விக்ராந்த் பேசுகையில்; ''சிசிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியின் போது காயமடைந்த விஷ்ணு நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,'' என்றார்.

சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான நடிகர் விஷால் கூறுகையில், "நாங்க எல்லோரும் நடிகர்களா இல்லாம சிசிஎல் கிரிக்கெட் வீரர்களா உங்களை இங்க சந்திக்கிறோம். சிசிஎல் கோப்பையை ரெண்டாவது முறையா ஜெயிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இதுக்கு என்னோட டீம் பிளேயர்ஸ்தான் காரணம். அவங்களுக்கு எனது நன்றிகள்.

எல்லோரும் ஸ்கூல்ல, காலேஜ்ல கிரிகெட் விளையாடி இருப்போம். ஆனா புரபெஷனலா விளையாட ஆரம்பிச்ச பிறகு நாங்க நடிகர்களா இருப்பதை மறந்து வீரர்களா மாறிட்டோம். இந்தியாவில் உள்ள அத்தனை சினிமா உலகத்தினரையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வந்தது சிசிஎல்தான்.

விஷ்ணுவுக்கு அடிபட்டதை பார்த்துவிட்டு நிறைய பேர் எங்ககிட்ட வந்து 'இதெல்லாம் உங்களுக்கு தேவையா?'ன்னு கேட்டாங்க. ஆனா ரசிகர்களின் மத்தியில் விளையாடிய எங்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெருமையான விஷயம்னு... நடிப்பைத் தவிர எங்களிடம் கிரிக்கெட் திறமையும் இருக்குன்னு காட்ட வச்சதே இந்த சிசிஎல்தான்.

கிரிக்கெட் விளையாடிய ஒருமாதம் முழுக்க நாங்கள் நடிகர்கள் என்பதை மறந்து வீரர்களாகவே மாறி விட்டோம்.

எங்களுக்கும் கர்நாடக வீரர்களுக்கும் பிரச்சினை எதுவுமில்லை. கிரிக்கெட்டில் இது சகஜம்தான். கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். அதை அவர்களால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சிசிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றதற்கு காரணமே கர்நாடக அணி கேப்டன் சுதீப்தான்.

இறுதிப் போட்டி 45 நிமிடங்கள் லேட்டானதற்கு நாங்கள் காரணமில்லை. இரண்டு விமானங்களை தவறவிட்டிருந்தாலும் மூன்றாவது விமானம் பிடித்து சென்று விட்டோம். ஆனால் மைதானத்தில் 'டெக்னிக்கல் பால்ட்' ஏற்பட்டதால் அவர்கள் 45 நிமிடம் தாமதம் செய்தனார்.

இந்தப் போட்டியில் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மறக்கமுடியாது. போட்டிகள் முடிந்து மூன்று நாள் கழித்து ஜீவா எனக்கு போன் செய்தார். 'மச்சி நான் நம்ம பாய்ஸை மிஸ் பண்றேண்டா. என்னால என் பேமிலில கூட சேர முடியல. ஒரு மாசம் விளையாடினது அப்படியே மனசுல இருக்குடா' என்றார். அடுத்த சில நாட்களில் நாங்களனைவரும் சந்தித்துக் கொண்டோம். இந்த அனுபவம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் வராது.

இந்த கிரிக்கெட்டிலும் பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருந்துச்சி. நாங்க ஒரு பக்கம் விளையாடி ஜெயிச்சிட்டோம்.

கோபப்பட்ட விஷ்ணு மனைவி..

எங்கள் அணியின் முக்கிய பிளேயர் விஷ்ணுவுக்கு அடிபட்டபோது, நான் மனிதத் தன்மையை மறந்து விட்டேன். அணியின் கேப்டன் என்ற முறையில் விஷ்ணுவிடம் சென்று 'எப்படி இருக்க? உன்னால பந்து போட முடியுமா? இடது கைலதான அடி பட்டிருக்கு? வலது கையாலதானே பந்து போட போற... முயற்சி பண்ணி பாரேன்' என்றேன். விஷ்ணுவின் மனைவி இதைக் கேட்டு கோபத்தின் எல்லைக்கே போனார்.

நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஏன்னா டீமுக்கு விஷ்ணு ஒரு முக்கியமான பிளேயர். விஷ்ணு 'என்னால முடியல'ன்னு சொல்லிகிட்டே மயக்கமாயிட்டான். அவனுக்கு பட்ட அடியை மனதில் வைத்துக் கொண்டு வெறியோடு விளையாடினோம். ஜெயிச்சோம்.

கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம்

அணியில் நிறைய மிஸ்பீல்ட். கேட்ச் மிஸ்ஸிங் இருந்துச்சி. அப்படி மிஸ் ஆகும் போதெல்லாம் அடிபட்ட விஷ்ணுவைக்காட்டி அவனை மாதிரி விளையாடணும். வெறியோடு விளையாடுங்கன்னு திட்டினேன். இனி சென்னை அணியோட 'டேக் லைன்' கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம்ங்கறதுதான்.

நடிகைகளுக்கான 'சிசிஎல்' வருமா?

நடிகைகளுக்கு சிசிஎல் வருமா தெரியல. ஒருவேளை 'விமென் சிசிஎல்' ஆரம்பிச்சா என் டீம் ஆட்களை கழட்டி விட்டுட்டு அவங்களோட சேர்ந்திடுவேன். அப்படி நடந்தலும் நடக்கலாம்," என்றார் விஷால்.

Comments