புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

Thursday, February 16, 2012
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான பிரமாண்டமான புராண - வரலாற்றுப் படம் கர்ணன்.

பார்த்தவர் அத்தனைப் பேரையும் கட்டிப் போட்ட காவியப் படம் இது. சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம்.

பெற்ற தாய்க்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே வரம் அளித்த பெருமைக்குரிய தர்மவான் கர்ணன். தர்மதேவனையும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட வைத்த கர்ணன் என்ற மகாபாரதப் பாத்திரம் உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை கண்முன் நிறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அந்தப் படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.

இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய பி ஆர் பந்துலுவுக்கு இந்த நூறாவது ஆண்டு வருடம் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில், படத்தை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர், இதனை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

தொழில்நுட்ப ரீதியில் இன்றைக்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை 5.1 ஒலியமைப்புடனும், மேம்படத்தப்பட்ட தரத்துடனும் வெளியிடுகிறார்கள். அதே நேரம் ஒரிஜினல்தன்மை மாறாதவாறும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர். பின்னர் ஒரு புதிய படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவார்களோ அதே மாதிரி கர்ணனையும் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments