காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் மீண்டும் அதிமுகவுக்கு ரிட்டர்ன் ஆகிறார்!!!

Tuesday, February 28, 2012
சென்னை::இயக்குநர் பாக்யராஜைப் போலவே காமெடி நடிகர் எஸ்.வி.சேகரும் கூட மறுபடியும் அதிமுகவுக்கே வரப் போகிறாராம்.

சங்கர மடத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பவர் எஸ்.வி.சேகர். பாஜகவில் செயல்பட்டு வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மயிலாப்பூர் தொகுதியைத் தூக்கிக் கொடுத்து நிறுத்தி எம்.எல்.ஏ ஆக்கினார் ஜெயலலிதா.

இருப்பினும் காலப் போக்கில் ஜெயலலிதாவிடமிருந்து விலக ஆரம்பித்தார் எஸ்.வி.சேகர். இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதாவைச் சுற்றி இருந்த சசிகலா குடும்பத்தாரின் தலையீடு என்று கூறப்பட்டது. இந்த மன்னார்குடி வகையாறாவைத் தாண்டி மயிலாப்பூர்காரரால் ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அவர் கட்சிக்குள் இருந்தபடியே விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். அப்போது சசிகலாவுடன் ஜெயலலிதா நல்ல நட்பு பாராட்டி வந்ததால் சேகர் மீது கடும் காட்டம் கொண்டார். கட்சிக் கூட்டம், பொதுக்குழு என எதற்கும் சேகர் அழைக்கப்படவில்லை. சட்டசபைக்குள்ளும் கூட சேகரை அதிமுகவினர் ஒதுக்கியே வைத்தனர். அவரை கேள்வி கேட்கக் கூட அனுமதிக்கவில்லை.

இதைப் புரிந்து கொண்ட அப்போதைய ஆளும் கட்சியான திமுக, சபாநாயகர் மூலம் சேகரை சட்டசபையில் பேச வைத்து பிரச்சினையை மேலும் பெரிதாக்கியது. இறுதியில் எஸ்.வி.சேகரை கட்சியை விட்டுத் தூக்கினார் ஜெயலலிதா. கூடவே அனிதா ராதாகிருஷ்ணனையும் போனஸாக கட்சியை விட்டு விரட்டினார்.

இதில் அனிதா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் போய் சேர்ந்தார். திருச்செந்தூர் இடைத் தேர்தலிலும் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். சேகர் அப்படிச் செய்யவில்லை. திமுக தரப்புடன் நட்பு மட்டும் பாராட்டி வந்த அவர் திமுகவில் சேரவில்லை.

இடையில் ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்து விட்டு வந்தார். ஆனால் காங்கிரஸிலும் அவர் சேரவில்லை. இப்படி பெரும் மர்மமான முறையில் இருந்து வந்த சேகர், சமீபத்தில் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டதை சசிப் பெயர்ச்சி என்று கூறி வரவேற்றிருந்தார்.

இந்த நிலையில் பாக்யராஜைப் போல இவரும் அதிமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments