வாழ்வில் வெற்றி பெற நீங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்!!!

விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுத்தால் தான், ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடித்த நண்பன் படம், சமீபத்தில் வெளியாகி சூப்பராக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் நேரடியாக ரசிகர்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

கடந்த வாரம் கோவை சென்ற விஜய் நேற்று மதுரைக்கு வந்தார். மதுரையில் நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் முன்பு தோன்றி படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். பின்னர் ரசிகர்களிடம் பேசிய விஜய், என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பனாகத்தான் பார்க்கிறேன். இந்தபடத்தை வெற்றி பெற செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாரா விதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நண்பன் இல்லாமல் இருக்க முடியாது. அந்த கருத்து இந்தபடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். எனது ரசி்கர்களுக்கும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்யுங்கள். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். என்னை டாக்டர் ஆக்க என் அப்பா விரும்பினார். ஆனால் எனக்கோ சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால், வீட்டில் சண்டைபோட்டு இந்த துறைக்கு வந்தேன். இப்போது அதில் வெற்றியும் பெற்றும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments