

விமர்சனம் » காதலில் சொதப்புவது எப்படி!!!
இளம் காதலர்களின் ஈகோ மோதல்களை சின்ன சில நிமிட குறும்படமாக எடுத்து இண்டர் நெட்டில் உலவவிட்டு பெரும் புகழ்பெற்ற இயக்குநர் பாலாஜி மோகன், அதையே ஒரு அழகிய திரைப்படமாக்கியிருக்கிறார். அதுதான் காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படம் மொத்தமும்!
கதைப்படி கல்லூரி காதலர்கள் சித்தார்த்தும், அமலாபாலும் ஈகோவால் பிரிந்திருக்கின்றனர். இதே மாதிரி அமலாபாலின் அப்பா-அம்மாக்களான சுரேஷூம் (மாஜி ஹீரோவேதான்) அம்மா சுரேகா வாணியும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் கல்யாண ஜோடிகள். ஈகோவால் பிரிந்திருக்கும் இந்த இரண்டு ஜோடிகளுமே தங்களது ஈகோவை மறந்து இணைந்ததா...? இல்லையா...? என்பது தான் காதலில் சொதப்புவது எப்படி கரு, களம், கதை எல்லாமும்!
பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி... பொண்ணுங்க மாதிரி ஆண்களால் காட்டவே முடியாது.... என அடிக்கடி பஞ்ச் டயலாக் பேசியபடி துறுதுறு கல்லூரி மாணவனாகவே வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். ரசிகர்களுக்கு தன் காதல் புட்டுகிட்ட கதையை போரடிக்காமல் சொல்லுவதிலாகட்டும், அமலாவிடம் ஆரம்பத்தில் வழிந்து பின் எரிச்சலடைவதிலாகட்டும் எல்லாவற்றிலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். அமலாபாலும் ஈகோ பிடித்த காதலியாக, தானும் சளைத்தவர் இல்லை என்று ப்ரேம் டூ ப்ரேம் நிரூபணம் செய்திருக்கிறார் வாவ்!
மாஜி ஹீரோ சுரேஷ், சுரேகாவாணி, சித்தார்த்தின் அப்பா ரவி ராகவேந்தர், அம்மா சிவரஞ்சினி எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! நண்பர்களாக வரும் யுவன், யுவதிகளும் பிரமாதம்!
நிரவ்ஷாவின் அழகிய ஒளிப்பதிவும், தமனின் இதமான இசை எல்லாமும் சேர்ந்து பாலாஜி மோகனின் எழுத்து இயக்கத்தில் திரையில், காதலில் சொதப்பவில்லை, ஜெயித்திருக்கிறது! வாவ்!!
Comments
Post a Comment