வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

Thursday, February 23, 2012
மிஷ்கினின், "சித்திரம் பேசுதடி" படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில் கலக்கி வந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து, மனைவியுடன் தேனி மாவட்டம், காமயக் கவுண்டம்பட்டியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமாகவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முத்துராஜாவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்கிறது.

Comments