பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் 'செங்காத்து பூமியிலே': இளையராஜா!

இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'செங்காத்து பூமியிலே' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கும் ரத்னகுமார் இயக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, "வன்முறைக்கு எதிரான படம், ஒரே படம் என்றுகூட 'செங்காத்து பூமியிலே' படத்தை சொல்லலாம். மனிதனாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம். வாழ்கிற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறை. கோபத்தில் ஆயுதத்தை தூக்குவதற்கு முன்பு தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைத்துப் பார்த்தால், ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் வராது. ஆயுதத்தைக் கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள். வன்முறை காணாமல் போகும். இதைத்தான் 'செங்காத்து பூமியிலே' படம் பிரதிபலிக்கிறது. இயக்குநர் ரத்னகுமார் என்னிடம் வந்து இப்படத்திற்கு இசையமைக்க சொன்ன போது, "என்ன வழக்கமான அருவா, வெட்டுக்குத்து தானா? வன்முறையை விதைச்சிட்டு என்னத்த அறுவடை பண்ணப் போறீங்க." என்று கேட்டேன். உடனே படத்தை முடிச்சிட்டு போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்தேன் ரத்னகுமாரைப் பாராட்டினேன். இருந்தாலும் படத்தில் கொலைகளும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால், நல்ல கருத்தைச் சொல்லும் கதை என்பதால் கதைக்களத்துக்காக ரத்த வாடையைத் தெளித்திருக்கிறார். குறிப்பாக தென்மாவட்ட மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். வன்முறையின் வலி புரியும்." என்று கூறியவர், படத்தின் நடிகர்களைப் பற்றி கூறியபோது, "நல்ல கதைக்கு நடிகர்கள் தேவையில்லை. அது மாதிரிதான் 'செங்காத்து பூமியிலே' படத்துக்கும் நடிகர்கள் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிச்ச சந்தமாயி என்ற கதாபாத்திரம் அப்படியே என் கண்முன்னே இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. வாழ்ந்து காட்டிவிட்டார். இந்தப் படம் ஓடணும். யதார்த்தமான தென்பகுதி மக்களின் வாழ்க்கை பதிவு என்றுகூட இப்படத்தைச் சொல்லலாம்." என்றார்

Comments