வைரமுத்துவின் பாடல்கள் ஓய்வதில்லை..அன்று கார்த்திக், ராதாவுக்கு, இன்று மகன், மகளுக்கு!

அன்று கார்த்திக், ராதா இணைந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும், அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள் எழுதிய வைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது மகன், மகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளது.

தமிழ் சினிமாவில் இது ஒரு அரிய நிகழ்வு. இரு தலைமுறையினருக்கு அதுவும், ஒரே நடிகர், நடிகைக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் ஒரே கவிஞர் பாடல்கள் எழுதுவது என்பது மிகவும் அரியதாகும். அந்த சாதனையை வைரமுத்து இப்போது நிகழ்த்தியிருக்கிறார்.

பாரதிராஜாவின் இயக்கம், இசைஞானி இளையராஜாவின் இசை மழை ஆகியவற்றுடன் இணைந்து வைரமுத்துவின் பாடல் வரிகளும் புகழ் குடையி்ல அன்று அலைகள் ஓய்வதில்லை மூலம் இளைப்பாறியது. அப்படத்தில் ஜோடியாக அறிமுகமானவர்கள்தான் கார்த்திக் மற்றும் ராதா.

அன்று விடலைகளாக இருந்த இருவரும் இன்று தங்களது விடலைப் பருவ வாரிசுகளை களம் இறக்கி நடிக்க விட்டுள்ளனர். 1982ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை வைரமுத்து எழுதினார். இசைஞானியின் இசை மெட்டுக்களில் இந்த ஆயிரம் தாமரை மொட்டுக்கள் தொட்ட உச்சத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்று காலம் திரும்பியுள்ளது. கார்த்திக்கின் மகன் கெளதம் முத்துராமன் மணிரத்தினம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கெளதமுக்காக வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.

அதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தில் ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். அதற்கும் வைரமுத்து வரிகள் சூட்டியுள்ளார்.

அதிசயம்தான்...!

Comments