பிரபுதேவாவை பிரிந்தார் நயன்தாரா : மீண்டும் நடிக்க வருகிறார்!

தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா சம்மதித்துள்ளார். இதனால் பிரபுதேவாவிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டார் நயன்தாரா. அவர் கடைசியாக ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்‘ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளில் எல்லோரிடமும் கண்ணீர் விட்டு அழுதபடி விடை பெற்றார். திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று பிரபுதேவா அப்போது கூறி வந்தார். இதற்கிடையே பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

இந்நிலையில், ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்‘ படம் தெலுங்கில் ஹிட்டானதை அடுத்து, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவிதேஜா உள்ளிட்ட ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள், அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், நயன்தாரா பதிலேதும் சொல்லாமல் இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் ஹீரோக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நயன்தாரா தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தை தசரத் இயக்குகிறார். இதுபற்றி தசரத் கூறும்போது, ‘‘நயன்தாரா நடிப்பது உண்மைதான். நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது‘‘ என்றார். இப்போது நயன்தாரா நடிக்க உள்ள படத்துக்கு சம்பளமாக, ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக, பட யூனிட் தெரிவித்துள்ளது.

நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து வாழ, சென்னை போட் கிளப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தனர். இப்போது அந்த வீட்டில் இருவரும் இல்லை என்று கூறப்படுகிறது. பிரபுதேவாவிடம் இருந்து சுமூகமாக பிரிந்துவிட்டதால்தான் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்றும் தமிழ், தெலுங்கில் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments