முதல்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!!!



தமிழ் சினிமா இசைக்கு 2012- நல்லவிதமாக அமையப் போவதற்கான அமர்க்களமான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக சத்தமே இசை என்று சத்தியம் பண்ணிக்கொண்டிருந்த கோலிவுட்டில், மீண்டும் சங்கீதம் மனதை வருடத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப மாதமான ஜனவரியில் தோணி, மயிலு என இளையராஜாவின் மிக இனிமையான இரண்டு இசைக் குறுந்தகடுகள் வெளியாகியுள்ளன. பெரும் போர்க்கள சத்தத்தில் சிக்கித் தவித்தவனுக்கு மென்மையான வருடல் மாதிரி அமைந்துள்ளன இந்தப் படங்களின் ஒவ்வொரு பாடலும்.

அடுத்த இனிய செய்தி, இயக்குநர் கவுதம் மேனன், இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்திருப்பது.

ராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்தான் கவுதம் மேனன் என்றாலும், இதுநாள் வரை அவர் இளையராஜா இசையில் படம் எதுவும் செய்யவில்லை. இவர் பங்குதாரராக இருந்த நிறுவனம் தயாரித்த அழகர்சாமியின் குதிரையில் முதல்முறையாக இணைந்தார் தயாரிப்பாளர் என்ற முறையில். அந்தப் படம் பின்னர் க்ளவுட் நைன் கைக்கு மாறியது.

இப்போது நேரடியாக தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜாவை இசையமைக்குமாறு கவுதம் மேனன் கேட்க, அதற்கு இசைஞானியும் ஒப்புக் கொண்டார்.

அந்தப் படம்தான் 'நீதானே என் பொன் வசந்தம்'. என்பதுகளில் இளையராஜாவின் இசையில் வந்த அற்புதமான பாடலின் முதல் வரிதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பை இளையராஜாவின் இசை ரசிகன் என்ற முறையில் வைத்ததாக முன்பே கவுதம் மேனன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது இசையமைப்பாளர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ரஹ்மான் இசையமைக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது.

இதுநாள் வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்த கவுதம் இப்போது வெளிப்படையாக அறிவித்தார். "ஆம்... இசைஞானி இளையராஜா சார்தான் நீதானே என் பொன் வசந்தம் பட இசையமைப்பாளர். அவரது ரசிகன் என்ற முறையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். விரைவில் இசைக் கோர்ப்பு ஆரம்பமாக உள்ளது. என்னுடைய நீண்ட நாள் கனவு இது... இந்தப் படம் முடியும் வரை நான் கனவில் மிதக்கப் போகிறேன்,"என்றார்.

இதுகுறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, "ஆமாம்... இந்த ஆண்டு நான் சில முக்கியமான படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒன்று கவுதம் மேனன் படம். இன்னொன்று ராஜீவ் மேனன் படம். வேலை முடிந்ததும் விரிவாகப் பேசலாம்," என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா கூறுகையில், "நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இளையராஜா + கவுதம் மேனன்... முழுக்க முழுக்க காதல் பாடல்கள். ஆம்... நம் இசைஞானி இசையில் நான் நடிக்கும் படம்... ஆஹா நினைப்பே சுகமாக உள்ளது," என்றார்.

ஆஹா... கோலிவுட் இசையின் பொற்காலம் திரும்பிடுச்சி!

Comments