இனி சொந்த குரலிலேயே...! த்ரிஷா அதிரடி முடிவு!!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டது. சென்னையிலேயே பிறந்து, வளர்ந்த அம்மணி, சமீபத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தில் தான் சொந்த குரலில் பேசினார். இதில் கிடைத்த நல்ல வரவேற்பு இனி சொந்த குரலிலேயே பேச முடிவெடுத்து இருக்கிறார் த்ரிஷா. இதுகுறித்து அவர் கூறியதாவது, மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு என்னை சொந்த குரலில் பேச வைத்தார். படத்தில் என்னுடைய டயலாக் கொஞ்சம் தான் என்றாலும், அதனை சிறப்பாக செய்தேன். வெங்கட்பிரபு கூட பாராட்டினார். மேலும் உங்கள் குரல் தான் நன்றாக இருக்கிறதே, ஏன் நீங்கள் சொந்த குரலில் பேசக்கூடாது என்று கேட்டார். அப்போது முதல் இனி சொந்த குரலில் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி இப்போது விஷாலுடன் நடித்து வரும் சமரன் படத்திலும் சொந்த குரலிலேயே பேசி வருகிறேன்.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த பாடிகார்ட் படம் தனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தனக்கு கிடைத்த நல்ல வேடமாக பாடிகார்ட் படத்தை கருதுகிறேன். இந்தபடம் மூலம் நிறைய பேர், பழம்பெரும் நடிகை சாவித்திரி, மறைந்த நடிகை சவுந்தர்யா போன்றோருடன் என்னை ஒப்பிட்டு பாராட்டுகின்றனர். இதை பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதேசமயம் அவர்கள் இருவரும் திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர்கள். எனவே அவர்களோடு என்னை ஒப்பிட்டு பேசுவதை நான் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

Comments